சென்னை: கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: இன்றைய டிஜிட்டல் உலகில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி என்பது இன்றியமையாத கல்வி உபகரணமாக விளங்குகிறது. மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும், இணையவழிக் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் மடிக்கணினிகள் பெரிதும் உதவும்.
இதனைக் கருத்தில் கொண்டு 2026-27ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வெற்றி மடிக்கணினித் திட்டத்தை ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்துவதற்கு முதல்வர் விஜய் உத்தரவு அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கான நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வெற்றி மடிக்கணினித் திட்டத்தின் மூலம் 2026-2027-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ, மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை மற்றும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்விப் பிரிவுகளில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு மாணவர்கள் பயனடைவார்கள்.
மேலும், முந்தைய 2025-2026ம் கல்வியாண்டில் மடிக்கணினித் திட்டத்தில் பயனடையாத அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு மாணவர்களும் தற்போதைய இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வித் தேவைகளைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு இன்டல் கோர் ஐ5 அல்லது அதற்கு இணையான உயர்தரத் தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தை மிகச் சீரிய முறையில் கண்காணித்து, தொய்வின்றிச் செயல்படுத்திட முதல்வர் விஜய் தலைமையில் உயர்மட்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படவுள்ளது. மேலும், தரக்கட்டுப்பாட்டுடன் கூடிய மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்வதை உறுதிசெய்ய தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு (ELCOT) நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது.
இன்றைய அதிவேக டிஜிட்டல் யுகத்தில், நமது மாநிலத்தின் அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் உலகளாவிய போட்டித் திறன்களில் சிறந்து விளங்கவும், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த வெற்றி மடிக்கணினித் திட்டம் ஒரு மாபெரும் மைல்கல்லாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.