தமிழகம்

வெற்றி 150: கிராமப்புற வேலை உறுதி திட்டம் குறித்த தமிழக பட்ஜெட் அறிவிப்பு சொல்வது என்ன?

மோகன் கணபதி

சென்னை: கிராமப்புற வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கை 125-ல் இருந்து 150 ஆக உயர்த்தப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வெற்றி 150’ என இத்திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தனது பட்ஜெட் உரையில் வெளியிட்ட அறிவிப்பில், “தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சியடைந்த பாரதம் - கிராமப்புற வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (விபி ஜி ராம் ஜி) புதிய நிதிப் பங்கீட்டு முறை, மாநிலத்தின் நிதிநிலைக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

மொத்த திட்ட நிதியில் மாநில அரசின் பங்களிப்பாக, இதுவரை இல்லாத வகையில் 40 சதவீத நிதியினை ஏற்க வேண்டிய கட்டாயம் மாநில அரசிற்கு ஏற்பட்டுள்ளது. மாநில அரசு இந்த நிதிப் பங்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய அரசிடம் தமிழக அரசு ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது.

எனினும், ஊரக ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பெரிதும் சார்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் இதுவரை இல்லாத அளவிலான 5,057 கோடி ரூபாய் பங்களிப்புடன் மொத்தம் 12,642 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

மேலும், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்கும் அரசின் கொள்கையை நிறைவேற்றும் நோக்கில், ‘வெற்றி 150’ என்ற முன்முயற்சியை அரசு செயல்படுத்தும். இதன் கீழ், 125 நாட்கள் வேலைவாய்ப்பை நிறைவு செய்துள்ள, நலிவுற்ற மற்றும் ஏழை, எளிய குடும்பங்களுக்குக் கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பை அரசு வழங்கும்.

இதன் மூலம், அந்தக் குடும்பங்களுக்கு மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிங்கப்பெண் வலிமைப்படுத்தும் திட்டம்’

இதேபோல், மகளிர் சுய உதவிக் குழுக்களை, குறுந்தொழில் நிறுவனங்களாக உயர்த்தும் நோக்கில் ‘சிங்கப்பெண் வலிமைப்படுத்தும் திட்டம்’ என்ற புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பட்ஜெட் அறிவிப்பில், “தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்கள் பல ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று சிறந்த நிலையை அடைந்துள்ளன.

இருப்பினும், இனிவரும் காலங்களில் சுயஉதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலைக்கு உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு, ‘சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கும்.

இத்திட்டத்தின் கீழ், நிலையான தொழில்முனைவோரின் செயல்திறனை வெளிப்படுத்தும் ஒவ்வொரு சுயஉதவிக் குழு நிறுவனங்களுக்கும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்படும். மேலும், இந்த ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 38,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுயஉதவிக் குழுக்களுக்கு தற்போது கடன் மற்றும் மானியம் வழங்கும் முறை முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட முறையாக மாற்றியமைக்கப்படும். இணை தணிக்கை வசதியுடன் கூடிய இம்முறையின் மூலம் சுயஉதவிக் குழுக்களுக்கு கொடுக்கப்படும் நிதியானது எவ்வித காலதாமதமும் இன்றி அவர்களுக்கே சென்று சேர்கிறது என்பது உறுதி செய்யப்படும்.

இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 39,609 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT