ஜெயராஜ், பெனிக்ஸ்
மதுரை: தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் காவல் நிலைய மரண வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பெனிக்ஸ். இவர்கள் செல்போன் கடை நடத்தி வந்தனர்.
கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு நேரக் கட்டுப்பாட்டைத் தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரையும் போலீஸார் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு தந்தை, மகன் ஆகிய இருவரையும் போலீஸார் மிகக் கடுமையாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த நிலையில் முதலில் பெனிக்ஸ், பின்னர் ஜெயராஜ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
இதையடுத்து சிபிஐ போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் தர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், காவலர்கள் முத்து ராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணையில் இருந்தது. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.
கைதான 9 பேரும் ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியாயின. கைதான நாளிலிருந்து 9 பேரும் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. கால அவகாசம் முடிந்த நிலையில், மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு விசாரணை நீதிமன்றம் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் வழங்கி கடந்தாண்டு நவம்பர் 26-ல் உத்தரவிட்டது.
இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை சூடு பிடித்தது. தினமும் விசாரணை நடந்தது. இதுவரை அரசுத் தரப்பில் 52 சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் 7 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.
271 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. லத்தி உள்ளிட்ட 57 சாட்சியப் பொருட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (மார்ச் 23) மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.