சென்னை: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரத்து செய்யப்பட்ட, கைவிட திட்டமிடப்பட்ட கணிதம் உள்ளிட்ட முக்கியப் பாடப் பிரிவுகளை மீண்டும் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் 29 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணிதம் உள்ளிட்ட முக்கியப் பாடப் பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
குறிப்பாக, 20 அரசுக் கல்லூரிகளில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடப் பிரிவுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில் இருந்ததாகக் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 கல்வியாண்டில் மொத்தம் 1,26,959 இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள் உள்ள நிலையில், ஜூலை 11-ம் தேதி நிலவரப்படி 83,276 இடங்கள் மட்டுமே நிரம்பியிருந்தன. இது 65.59 சதவீதம் மட்டுமே. முந்தைய கல்வியாண்டின் இதே காலகட்டத்தில் 78.8 சதவீதம் இடங்கள் நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர் சேர்க்கை சரிவதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அரசுக் கல்லூரிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டிய நிர்வாகம், பாடப்பிரிவுகளையே முழுமையாக நீக்குவது எத்தகைய அணுகுமுறை?
போதிய பேராசிரியர்கள் நியமிக்கப்படாமை, ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகளின் பற்றாக்குறை, சமகால வேலைவாய்ப்புக்கு ஏற்ற புதிய பாடத்திட்டங்கள் இல்லாமை, தனியார் கல்லூரிகளுடன் போட்டியிட முடியாத கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இல்லையா?
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, இருக்கும் கல்வி வாய்ப்புகளையும் சுருக்குவதுதான் சமூகநீதியா? மாணவர்கள் வரவில்லை என்றால் அதற்கான காரணத்தைக் களைவதற்குப் பதிலாக, பாடப்பிரிவுகளைக் குறைப்பது எந்த வகையில் நியாயம்?
எனவே, ரத்து செய்யப்பட்ட மற்றும் கைவிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகளை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வேலைவாய்ப்புக்கு ஏற்ற புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி உரிமையைப் பாதுகாப்பதில் தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.