சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பரந்தூரில் ரூ.34 ஆயிரம் கோடி செலவில் பசுமை வெளி விமான நிலையத்தை 2030-ம் ஆண்டுக்குள் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.
இதற்காக பரந்தூர், வளத்தூர், குணகரம்பாக்கம், சிங்கிலிபாடி, மகாதேவிமங்கலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜன. 20-ம் தேதி அன்று தவெக தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகப் பேசினார்.
ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் விஜய் இத்திட்டம் குறித்த ஆலோசனையில், கையகப்படுத்தப்பட்ட சுமார் 1,700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பரந்தூரில் விமான நிலையத்துக்கு பதில் சிப்காட் அமைக்க அரசு முனைந்தால், அதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் நிற்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.