தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன்

 
தமிழகம்

காவிரி தொழில்நுட்பக் குழும துணைத்தலைவர் பதவியை நிரப்புவதில் தாமதம்: அரசுக்கு வேல்முருகன் கண்டனம்

மு.வேல்சங்கர்

சென்னை: காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவர் பதவியை நிரப்புவதில் அரசு காட்டி வரும் தாமதத்துக்கு தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி தொழில்நுட்பக் குழுமத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றிய செல்வராஜ் கடந்த ஜூன் 28-ம் தேதி பதவியிலிருந்து விலகிய நிலையில், அந்தப் பொறுப்பு காலியானது. இதையடுத்து, அப்பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை கடந்த 9-ம் தேதி அன்று வெளியிட்ட அரசாணையில், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவர் பதவியை நிரப்புவதற்கான அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்புக்கு தற்போது பணியில் உள்ள நீர்வளத்துறை தலைமைப் பொறியாளரை நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியிடப்பட்டு 17 நாட்கள் கடந்தும், துணைத்தலைவரின் பெயரை அரசு இதுவரை அறிவிக்காதது ஏன்? காவிரி தொழில்நுட்பக் குழுமம் தமிழகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான நீர் விவகாரங்களில் தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான ஆலோசனைகளை வழங்கும் முக்கிய அமைப்பாக செயல்படுகிறது.

காவிரி உள்ளிட்ட நீர்விவகாரங்களில் தமிழகத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பத் தரவுகள் மற்றும் ஆவணங்களைத் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் இவ்வமைப்பின் பங்கு முக்கியமானது. அப்படியிருக்க, இவ்வளவு முக்கியமான அமைப்பின் துணைத்தலைவர் பதவியை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்ட பின்னரும் நியமனத்தை நிறைவு செய்யாமல் இருப்பது ஏன்?

நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த்தும், நீர்வளத்துறைச் செயலாளர் பிரசாந்த் எம்.வட்நரே-வும், அரசாணை வெளியிடப்பட்ட பிறகும் துணைத்தலைவர் நியமனத்தை நிறைவு செய்யாததற்கான காரணம் என்ன என்பதை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்.

எனவே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, அரசாணை எண் 71-ன் அடிப்படையில் தகுதியான தலைமைப் பொறியாளரை காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவராக காலதாமதமின்றி நியமிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT