தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களைவிட எங்களின் கோரிக்கைகள் முக்கியம். இதை நிறைவேற்றவில்லை எனில் கூட்டணியில் தொடர்வதா அல்லது வேண்டாமா என முடிவு செய்வோம் என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை உயர்நிலைக்குழு அவசரக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சி தலைவர் தி.வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும், அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் கூறியதாவது: நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கேட்டு திமுகவின் பேச்சுவார்தை குழுவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தோம். ஆனால், இப்போது வரை கூடுதல் இடங்கள் பற்றி தகவல் கிடைக்கபெறவில்லை.
கூடுதல் இடங்கள் தரவில்லை, கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்ற நிலையை திமுக எடுக்குமெனில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியின் அரசியல் தலைமைக்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, கோரிக்கையை ஓரிரு நாட்களில் நிறைவேற்ற முன்வருகிறதா, இல்லையா என தெரிந்து அதற்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூடி, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 10 கோரிக்கைகளை கொடுத்து உள்ளோம். எங்களுக்கு கூடுதல் இடங்களை விட தமிழ்சமூகத்தின் மிகமுக்கியமான இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.