தமிழகம்

“திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்” - வேலூர் இப்ராஹிம் கருத்து

செய்திப்பிரிவு

திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைய வேண்டும் என பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்ற இவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: நடிகர் விஐயை பொருத்தவரை இதுவரை கவுன்சிலர் தேர்தலைக்கூட சந்தித்தது கிடையாது. ஆனால், பாஜக 20 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. எனவே, நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சியையும், பாஜகவையும் ஒப்பிட்டு பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

விஜயை, பாஜக எதிர்பார்க்கவில்லை. ஆனால், திமுகவை வீழ்த்த வேண்டும் என அவர் நினைத்தால், தனிப்பட்ட முறையில் அவரால் முடியாது என அவருக்கும், அவரது கட்சி நிர்வாகிகளுக்கும் தெரியும். தவெகவுக்கு 15 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை வாக்குகள் உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், இந்த வாக்கு சதவீதத்தை வைத்து திமுகவை எப்படி வீழ்த்த முடியும்?.

ஆனால், வாக்குகளைப் பிரிக்கவும், திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்யவும் மட்டுமே முடியும். எனவே, திமுகவை வீழ்த்த வேண்டும் எனில், அதற்கு வலிமையான அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்.

இதை விடுத்து வழக்கம்போல திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதை விஜய் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தால், இந்தத் தேர்தலுடன் விஜய் காணாமல் போவார். கமல்ஹாசன் நிலைதான் விஜய்க்கு ஏற்படும். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்க்கு திமுக ஒரு எம்.பி. பதவியை கொடுக்கும் என நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

SCROLL FOR NEXT