கோப்புப் படம்
சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 10-ம் தேதி முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதன் மூலம், தாம்பரம் - கடற்கரைக்கு மேலும் ஒரு இணைப்பு சேவை கிடைத்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் (மேம்பால ரயில் வழித்தடம்) தடத்தில், தினசரி 100 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான 5 கி.மீ. தொலைவை இணைக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தட திட்டப்பணி, 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
பல்வேறு தடைகளுக்கு பிறகு 17 ஆண்டுகளாக நடந்து வந்த ரயில் இணைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, கடந்த ஆண்டு நவ.7, டிச.15 தேதிகளில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையே, எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியின் ஒருபகுதியாக 10, 11-வது நடைமேடைகளில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதையடுத்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பயணிகள் வசதிக்காக, வேளச்சேரி - பரங்கிமலை இடையே மின்சார ரயில் சேவை மார்ச் 10-ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வேளச்சேரி - பரங்கிமலை மின்சார ரயில் சேவை மார்ச் 10-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இதன்மூலம், தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் பயணிகளுக்கு, மற்றொரு இணைப்பு ரயில் சேவை கிடைக்க வழிவகை செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.