தமிழகம்

“பாமகவின் எந்தவொரு அணியையும் ஏற்க மாட்டோம்!” - விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு நேர்காணல்

கோ.யுவராஜ்

விசிக இம்முறை இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருப்பவர் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு. திமுக கூட்டணியில் இம்முறை அவர்களுக்கு அது சாத்தியமாகுமா என்று தெளிவில்லாத நிலையில் ‘இந்து தமிழ் திசை’க்காக வன்னி அரசிடம் பேசினோம்.

தமிழக அரசியிலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்ட விசிக-வுக்கு இம்முறை இரட்டை இலக்க தொகுதிகள் சாத்தியம் என நினைக்கிறீர்களா?

விசிக தற்போது தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. எம்பி, எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை தாண்டி தமிழக அரசியலில் முதன்மையான கட்சியாக மாற்றுவது தான் எங்களின் இலக்கு. சட்டப்பேரவையில் எங்களுக்கான எண்ணிக்கையை கூட்டுவதன் மூலம் முன்னணி கட்சியாக மாற முடியும். அதனால் இம்முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் நாங்கள் வெற்றி பெற வேண்டும்.

பட்டியலின மக்களுக்கான கட்சிகளில் விசிக தான் ஓரளவுக்கு பெரிய கட்சி. அப்படி இருந்தும் ஏன் உங்களால் இன்னும் பிரதானக் கட்சியாக வர முடியவில்லை?

நாங்கள் பட்டியலின அடையாளத்தை மட்டுமே சுமந்து கட்சியை வழிநடத்தவில்லை. சாதி ஒழிப்பு, தமிழ் தேசிய விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய கொள்கைகளைக் கொண்டே விசிக தொடங்கப்பட்டது. இத்தகைய தனித்துவம் மற்ற பட்டியலின கட்சிகளுக்கு இல்லை. அனைத்து பிரச்சினைகளுக்காகவும் நாங்கள் போராட்டம் நடத்தி இருந்தும் விசிக-வை ஒரு சமூக கட்சியாகவே சுருக்கிப் பார்க்கின்றனர். இதை அரசியல் தீண்டாமையாகவே பார்க்கிறோம்.

பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான பிரச்சினைகளில் திமுக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தியா?

பட்டியலின மக்கள், விளிம்பு நிலை மக்கள், பெண்கள் மீதான தாக்குதல் என்பது இந்தியா முழுமைக்குமே மிக மோசமாக உள்ளது. ஒப்பீட்டளவில் பார்த்தால் தமிழகத்தில் குறைவாகத்தான் உள்ளது. என்றாலும் அதுபோன்ற பிரச்சினைகளில் தமிழகத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை.

2026 தேர்தலில் உங்களின் இலக்கு திமுக கூட்டணியின் வெற்றியா... விசிக-வுக்கான அங்கீகாரமா?

2026 தேர்தலில் வெற்றி என்பதை தாண்டி மாநில உரிமைகளை பாதுகாப்பது, சமுகநீதி கொள்கைகளை நிலைநிறுத்துவது, சனாதன எதிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கி திமுக கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கிறோம். இந்தக் கூட்டணியின் வெற்றி என்பது சமுகநீதி, சமத்துவத்தின் வெற்றி. ஆகையால் இதை தனி்த்தனியாகப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை.

இளைஞர்களின் பார்வை விஜய்யின் பக்கம் திரும்பி இருக்கிறதே..?

விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு இருப்பதாகக் காட்டப்படும் தோற்றமே போலியானது. இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத அவருக்கு 25 சதவீத வாக்கு உள்ளது என கட்டமைப்பதையே ஒரு திட்டமிட்ட செயலாகப் பார்க்கிறேன். கரூர் சம்பவத்தில் அவரின் நடவடிக்கையை நாம் பார்த்தோம். மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. சினிமா நடிகர் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் தான் வருகிறார்கள். தவெக தலைவர் விஜய்யைப் பார்க்க தொண்டர்கள் யாரும் வரவில்லை.

சீமானும் விஜய்யும் திமுக-வை தாக்குமளவுக்கு பாஜக-வை தாக்க தயங்குவது ஏன்?

தமிழகத்தில் திமுக-வை வீழ்த்த வேண்டும் எனபதே பாஜக-வின் இலக்கு. அதற்காக திமுக மீது வெறுப்பை, எதிர்ப்பை கட்டமைக்கத்தான் பாஜக தனது ஒட்டுக் குழுக்களாக சீமானையும், விஜய்யையும் பயன்படுத்துகிறது. விஜய்க்கு முன் சீமான் திமுக எதிர்ப்பை கட்டமைத்து வந்தார். அவருக்கு மவுசு குறைந்ததால் தற்போது விஜய்யை இறக்கியுள்ளனர்.

சிபிஐ, இடி போன்ற தன்னாட்சி அமைப்புகளை வைத்து பாஜக இம்முறை உங்கள் கூட்டணிக்கு குடைச்சல் கொடுத்தால் அதை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

சிபிஐ, இடி, ஐடி ஆகிய தன்னாட்சி அமைப்புகள் தற்போது பாஜக-வின் கைப்பாவைகளாக மாறியுள்ளன. தேர்தல் ஆணையம் பாஜக-வின் செயல்திட்டங்களை செயல்படுத்தும் அமைப்பாக மாறியுள்ளது. மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் இதை எதிர்கொள்ளும் வலிமை எங்களிடம் உள்ளது. எத்தனை படைகளோடு வந்தாலும் மக்கள் படை கொண்டு அதை வெல்வோம்.

பிளவுபட்டு நிற்கும் பாமக அணிகளில் ராமதாஸ் அணி உங்கள் பக்கம் வரும் போல் தெரிகிறதே..?

ஏற்கெனவே பாஜக, பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது என எங்கள் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆகவே, பாமக-வில் இருந்து எந்தவொரு அணி வருவதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பாமக சாதிய நச்சு உடையது. அவர்கள் பிளவுபட்டாலும் நச்சு நச்சு தான். எங்களுக்கு தனிப்பட்ட முறையில் ராமதாஸ், அன்புமணி மீது எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. எங்களின் கொள்கைக்கு எதிராக இருப்பதால் ஒருபோதும் பாமக, பாஜக-வுடன் இணைய மாட்டோம்.

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், தேர்தலில் மக்கள் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

இந்த ஆட்சியில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வேண்டுமென்றே நிறைவேற்றப்படாமல் இல்லை. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலின் போது இது குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி புரியவைப்போம்.

உங்கள் பார்வையில் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் எப்படி இருக்கிறது?

சமூகப் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் பாஜக-வின் எண்ணம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பது பாஜக தான். அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தான் நாங்கள் கூறுகிறோம். எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது.

பார் கவுன்சில் கட்டிடத்துக்குள் நுழைந்து விசிக-வினர் வழக்கறிஞரை தாக்கிய விவகாரத்தில் திருமாவின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்குள்ளானதே..?

பாஜக-வினர் அந்தச் சம்பவத்தில் திட்டமிட்டு அவதூறு கட்டமைக்கின்றனர். சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கும் முன்பே அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். அன்புமணி ஆட்கள் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ-வான அருளை தாக்கியது பற்றி யாரும் பேசவில்லை. அண்ணாமலை, சீமான் ஆகியோர் பத்திரிகையாளர்களையே மிரட்டும் விதமாக, அராஜகமாக பேசுகின்றனர் அது குறித்தும் யாரும் எதுவும் பேசவில்லை. அப்படி இருக்கையில், எங்கள் தலைவருக்கு எதிரான விமர்சனத்தை விசிக-வை எதிர்கொள்ள முடியாதவர்கள் செய்த சதிவேலையாகவே பார்க்கிறோம்.

SCROLL FOR NEXT