விசிக தலைவர் திருமாவளவன்
புதுச்சேரி: புதுச்சேரி இண்டியா கூட்டணியில் ஏற்பட்ட குளறுபடியால், விசிக போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர் களம் இறங்கிறது. இதைத் தொடர்ந்து அவர்கள் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கி, பிரச்சாரம் செய்து வந்தனர். இப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உழவர்கரை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது.
புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸூக்கு 16 தொகுதிகள், திமுக வசம் 14 தொகுதிகள் அளிக்கப்பட்டன. இதில், திமுக தன் வசம் இருந்து உள்ஒதுக்கீடாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி வழங்குவது என்று முடிவானது. அதன்படி அக்கட்சிக்கு உழவர்கரை தொகுதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், காங்கிரஸாரில் சிலர் இந்த கூட்டணி ஒப்பந்தத்தை மீறி, திமுக போட்டியிடும் 5 தொகுதிகள் மற்றும் விசிக போட்டியிடும் உழவர்கரை தொகுதியில் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கினர். இதனால் புதுச்சேரி இண்டியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே, விசிக தரப்பில் இருந்து உழவர்கரை தொகுதி மட்டுமல்லாது நெட்டப்பாக்கம், ஊசுடு, ஏனாம் தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். கடந்த சில நாட்களாக இந்த 4 தொகுதிகளிலும் விசிக சார்பில் வாக்கு சேகரிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் உழவர்கரை தொகுதியைத் தவிர்த்து இதர மூன்று தொகுதிகளிலும் வாக்கு கேட்கும் பணியை நிறுத்த கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “விசிக சார்பில் அறிவிக்கப்பட்ட நெட்டப்பாக்கம், ஊசுடு, ஏனாம் தொகுதிகளில் வேட்பாளர்கள் பிரச்சார பணியை நிறுத்தி கொள்ள வேண்டும். உழவர்கரை தொகுதியின் விசிக வேட்பாளர் புஷ்பலதாவுக்கு முழு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என்று கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
எங்கள் கட்சித் தலைவரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் நேற்று தொடர்பு கொண்டு கேட்டதால், அவர் இந்த உத்தரவை இட்டுள்ளார். ‘உழவர்கரையில் விசிகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்து பிரச்சாரம் செய்யும்’ என்று அவர்கள் தரப்பில் உறுதி அளித்துள்ளனர். அங்குள்ள காங்கிரஸ் வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்டவர் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, “உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மனு தாக்கல் செய்த சிவசங்கரனுக்கு எங்கள் கட்சியில் இருந்து யாரும் பணியாற்ற மாட்டார்கள். அவர் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் அல்ல. இந்த தொகுதியில் விசிக வேட்பாளர் புஷ்பலதாவுக்கு வாக்கு சேகரிப்போம்” என்று தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் விசிகவுக்கு வாக்கு சேகரிக்க தொடங்கி உள்ளனர்.