தமிழகம்

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரி விஜய் கடிதம் - விசிக ‘பாசிட்டிவ்’ ரியாக்‌ஷன்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “தவெகவுக்கு ஆதரவு கேட்டு விசிகவுக்கு கடிதம் வந்துள்ளது. மதசார்பற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க விஜய் உறுதியாக இருக்கிறார்” என்று விசிக பொதுச் செயலர் ரவிக்குமார் தெரிவித்தார்.

புதுச்சேரியில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், இந்தி திணிப்பை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணா சிலை அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி விசிக முதன்மை செயலர் அரிமாத் தமிழன் தலைமை வகித்தார்.

கட்சியின் பொதுச் செயலரும், எம்.பியுமான ரவிக்குமார் கண்டன உரையாற்றினார்.அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்தியை கட்டாயம் படிக்க புதுச்சேரி மக்களிடம் திணித்துள்ளனர். மும்மொழி கொள்கையை நாங்கள் ஏற்பதில்லை. இரு மொழி கொள்கையே சரியானது.

பாஜக கூட்டணி அமைத்த பிறகு அவர்கள் அழுத்தத்துக்கு ரங்கசாமி பணிந்து, நம் மக்களின் மொழி உரிமையை விட்டு கொடுத்துள்ளார். மும்மொழி கொள்கையை அவர் ஏற்கும்போதே விசிக சுட்டிக்காட்டி கண்டித்தது.

மும்மொழி கொள்கையில் மூன்றாவது மொழியாக பிரெஞ்சு இருக்கும் என்பதால் அமைதியாக இருந்தோம். மும்மொழி கொள்கை என்பதே இந்தி திணிப்பின் தந்திரம் என்பது புதுச்சேரியில் பாஜக நிருபித்துள்ளது. இதனால்தான் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என இதுவரை திமுக அரசு உறுதியாக இருந்தது.

புதுச்சேரி அரசு அரசாணையை திரும்ப பெறவேண்டும். பிரெஞ்சு படிக்க ஏற்பாடு செய்து, இந்தி திணிக்கும் முயற்சிக்கு அரசு உடந்தையாக இருக்கக் கூடாது. இந்தி திணித்தால் ஏற்கமாட்டோம். மிகப் பெரிய மொழி போராட்டமாக மாறும்.

காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றின் ஆதரவை விஜய் தலைமையிலான தவெக கேட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிலைப்பாட்டை டெல்லியில் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

விசிக தலைவர் திருமாவளவனுக்கும், இந்த ஆதரவு கேட்டு கடிதம் வந்துள்ளது. இது தொடர்பாக எங்கள் தலைவர் உரிய விளக்கம் அளிப்பார். இதுவரை தவெக மதசார்பற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உறுதியாக இருக்கிறது. அதனால்தான் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவை கோரியுள்ளனர்’ என்றார்.

SCROLL FOR NEXT