குன்னத்தில் ஆ.ராசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

 
தமிழகம்

திருமாவளவனை சிறுமைப்படுத்துவதா? - ஆ.ராசாவுக்கு எதிராக கொதித்தெழுந்த விசிகவினர்

செய்திப்பிரிவு

யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக துணைப்பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, திருமாவளவன் குறித்து பேசியிருந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக விசிகவினர் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட விசிக-வினர் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். பின்னர் திடீரென்று அந்த தீர்மானத்தை திரும்ப பெறுவதாக விசிகவினர் அறிவித்தனர்.

ஆனால் அதே சமயம், ஆ.ராசாவை கண்டித்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் விசிகவினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் பேசிய கட்சியின் குன்னம் தொகுதி மாவட்டச் செயலாளர் அன்பானந்தம், ‘‘திமுக எம்.பி ஆ.ராசா தொடர்ந்து பல நிகழ்வுகளில் எங்கள் கட்சித் தலைவர் திருமாவளவனை சாதித் தலைவர் என சித்தரிப்பதுடன், தன்னை மிகப் பெரிய அறிவாளி போலவும் காட்டிக் கொள்கிறார். எங்கள் தலைவர் தான், நாடாளுமன்றத்தில் பேசி 27 சதவீத ஓபிசி இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர்.

எங்கள் தலைவர் அனைத்து சமுதாயத்தினரும் மதிக்கக் கூடியவராக உள்ளார். அவர் மீது ஆ.ராசா தொடர்ந்து சாதி முத்திரை குத்துவது, அவர் ஆர்எஸ்எஸ் கைக்கூலியோ என்ற அச்சமும் உள்ளது. திமுக கூட்டணியை உடைக்கவும், தன்னை பட்டியலின தலைவர் போல காட்டிக் கொள்ளவும் அவர் இதுபோல பேசி வருகிறார்.

தமிழகத்தில் சனாதன சக்திகளும், சாதி வெறி கும்பலும் திமுக அரசை அகற்ற வேண்டும் என கொக்கரித்துக் கொண்டு இருக்கும் நிலையில், ஆ.ராசாவின் இதுபோன்ற பேச்சு வருந்தத்தக்கதாக உள்ளது.கூட்டணி தர்மத்தை மீறுவதாக உள்ளது. எனவே, இது போன்று பேசிய ஆ.ராசாவை கட்சிப் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பேசினார்.

SCROLL FOR NEXT