தமிழகம்

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: பெரும்பான்மையை எட்டியது தவெக!

ஐயூஎம்எல் ஆதரவால் 120 ஆக உயர்ந்த பலம்

அனலி

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெகவுக்கு விசிக ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சி பெரும்பான்மையை எட்டியது.

இது தொடர்பாக தவெக எம்எல்ஏ ஆதவ் அர்ஜுனா கூறும்போது, “அனைத்து தோழர்களுக்கும் எங்களுடைய நன்றி. ஜனநாயகம் காக்கப்படும். தமிழக மக்களுடைய ஆதரவுடன் தமிழக முதல்வராக எங்கள் தலைவர் உருவாவார்” எனத் தெரிவித்தார்.

ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பு இன்னமும் நடைபெறவில்லை.

தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கியுள்ள கடிதத்தில், “தமிழக மக்களுக்கு நிலையான, ஜனநாயக முறையிலான ஆட்சி கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் விசிக தனது 2 எம்எல்ஏ.,க்களின் ஆதரவையும் தவெகவுக்கு எந்த நிபந்தனையும் இன்றி வழங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயூஎம்எல் ஆதரவு அறிவிப்பு:

விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவைக் கொடுத்துள்ளது. ஆக, மொத்தம் 120 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது தவெக. அடுத்தக் கட்டமாக ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகளை எதிர்கொண்டுள்ளது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில், காங்கிரஸ் ஆதரவு மூலம் தவெக பலம் 112 ஆக உயர்ந்தது.

இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகரை சந்தித்து விஜய் கடிதம் வழங்கினார். ஆனால், ‘ஆட்சி அமைக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்தார். பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் தலைவர்களை தவெக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கோரினர்.

இதன் தொடர்ச்சியாக, தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வந்த இடதுசாரி கட்சிகள், இறுதியில் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தன. இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிடிஆர்.நிர்மல்குமாரிடம் அக்கட்சித் தலைவர்கள் வழங்கினர். இதன்மூலம் தவெக பலம் 116 ஆக உயர்ந்தது.

அதேவேளையில், விசிக தலைவர் திருமாவளவனுடனும் தவெகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இடதுசாரி தலைவர்கள் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் ஆளுநர் மாளிகை சென்ற விஜய், ஆளுநர் அர்லேகரை 3-வது முறையாக சந்தித்து, எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை வழங்கினார். அதன்பின்னர், தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் அலுவலகங்களுக்கு சென்ற விஜய், அங்கு அக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 118 இடங்கள் கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரிடம் இருந்து வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான் விசிகவும் ஆதரவு அளித்துள்ளது. அதன்பின் ஐயூஎம்எல் ஆதரவின் மூலம் தவெக பலம் இப்போது 120 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT