தமிழகம்

அவசரமாக டெல்லி விரைந்தார் விசிக தலைவர் திருமாவளவன்: காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, வேணுகோபாலை சந்திக்க திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தின் புதிய ஆட்சி அமைந்த சூழலில், விசிக தலை​வர் திரு​மாவளவன் திடீரென டெல்​லிக்கு சென்​றுள்ள தகவல், தமிழக அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்​றும் கே.சி. வேணுகோ​பாலை அவர் சந்​திக்க உள்​ள​தாக தெரி​கிறது.

இதுகுறித்து அரசி​யல் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 இடங்​களை வென்ற ‘தவெக’ தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​தா​லும், பெரும்​பான்மை இல்​லாத காரணத்​தால் காங்​கிரஸ் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் ஆதரவை பெற்​றது. நீண்ட இழுபறிக்கு பிறகு விசிக தனது ஆதரவை வழங்​கியது.

முன்​ன​தாக நடந்த விசிக நிர்​வாகி​கள் கூட்​டத்​தில், “தி​முக கூட்​ட​ணி​யில் உரிய அங்​கீ​காரம் கிடைக்​க​வில்​லை; எனவே, தவெக-​விடம் துணை முதல்​வர் பதவி மற்​றும் காலி​யாகும் திருச்சி கிழக்கு தொகு​தி​யைப் பெற வேண்​டும்” என ஒரு தரப்​பினர் அழுத்​தம் கொடுத்​தனர். ஆனால், “பாஜகவை முழு​மை​யாக எதிர்க்​காத தவெக-வுடன் கூட்​டணி வைப்​பது சரி​யாக இருக்​காது” என மற்​றொரு தரப்​பினர் எச்​சரித்​தனர். இறு​தி​யில், குடியரசுத் தலை​வர் ஆட்​சி​யைத் தவிர்க்​கவே ஆதரவு என திரு​மாவளவன் அறி​வித்​தார்.

தற்​போது அதி​முக-​வில் பழனி​சாமிக்​கும், சி.​வி.சண்​முகம் தரப்​புக்​கும் இடையே மோதல் உச்​சகட்​டத்தை எட்​டி​யுள்​ளது. இதன் தொடர்ச்​சி​யாக, சி.​வி. சண்​முகம் தரப்பு 34 அதி​முக எம்​எல்​ஏ-க்​களின் ஆதர​வுக் கடிதத்தை தவெக-வுக்கு வழங்​கத் தயா​ராகி​விட்​ட​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

லீமாரோஸ் மார்ட்​டின் மூல​மாக ஆதவ் அர்​ஜுனா ஏற்​பாட்​டில் சி.​வி.சண்​முகம் தரப்பு தவெக-வுடன் நெருங்​கு​வது திரு​மாவளவனுக்​குப் பெரும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஒரு​வேளை அதி​முக உள்ளே நுழைந்​தால், விசிக வெளி​யேறு​வது குறித்து அக்​கட்சி ஆலோ​சித்து வரு​கிறது.

இதுகுறித்து அகில இந்​திய காங்​கிரஸ் தலை​மைக்​குத் தனது கவலை​யைத் தெரிவிக்​க​வும், தமிழகத்​தின் தற்​போதைய அரசி​யல் சூழலை விளக்​க​வுமே திரு​மாவளவன் டெல்லி சென்​றுள்​ளார். குறிப்​பாக, திமுக-வுக்கு எதி​ரான அரசி​யலை காங்​கிரஸ் மற்​றும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகள் தீவிர​மாக முன்​னெடுக்​கக் கூடாது என அவர் வலி​யுறுத்த உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இன்று அல்​லது நாளை நடை​பெறவுள்ள இந்​தச் சந்​திப்​பு, தமிழக அரசி​யலில் புதிய திருப்​பங்​களை ஏற்​படுத்​தும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இவ்​வாறு வட்​டாரங்​கள் தெரிவித்​தன.

இதனிடையே நேற்று முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு 4 முறை அழைப்பு விடுத்தும் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT