

சென்னை: தமிழகத்தில் 200 யூனிட் மின்சாரம் வழங்கும் புதிய அறிவிப்பு அமல்படுத்தப்பட்டாலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டமும் தொடரும் என்று மின்சாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய முதல்வராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். அதேநேரம் தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடருமா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் மின்சாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சாரத் துறை செயலர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணை: தகுதியுள்ள அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 200 யூனிட்கள் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
அதன்படி இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கவும், இதற்காக ஆண்டுதோறும் ஏற்படும் கூடுதல் மின்கட்டண மானியமான ரூ.1,730 கோடியை தமிழக அரசு ஏற்கவும் ஆணையிடப்படுகிறது.
2.2 கோடி பேர் பலன்: இத்திட்டமானது விலைவாசி உயர்வு, பணவீக்கத்தின் தாக்கத்தை சமாளிக்கவும், சாமானிய மக்களின் சுமையைக் குறைப்பதற்கும் உதவும். அதேபோல், 500 யூனிட்டுக்கு மேல் மின்சார பயன்பாடு கொண்ட வீடுகளுக்கு ஏற்கெனவே உள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் நடைமுறை தொடரும். இந்தத் திட்டம் நேற்று முதலே அமலுக்கு வந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் தற்போது 2.55 கோடி வீட்டு மின் நுகர்வோர்கள் இருக்கின்றனர். இந்த அறிவிப்பால் சுமார் 2.2 கோடி பேர் பயனடைவர் என தகவல்கள் கிடைத்துள்ளன.