வானதி சீனிவாசன் | கோப்புப் படம் 
தமிழகம்

பாஜக தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து வானதி சீனிவாசன் விளக்கம்

டி.ஜி.ரகுபதி

கோவை: "பாஜக தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது, கட்சியின் வழக்கமான நடைமுறை தான். இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை" என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூரை பூர்வீகமாக கொண்ட வானதி சீனிவாசன், கடந்த 2021-ம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவராக பதவி வகித்து வந்தார். அவர் இந்த பதவியை ஏற்று 6 ஆண்டுகளான நிலையில், இன்று (ஆக.17) இப்பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டார்.

பதவி விடுவிப்பு, பாஜகவில் நடக்கும் வழக்கமான நடவடிக்கை தான் என அக்கட்சியின் நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டாலும், அரசியல் காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது, மத்திய அரசின் திட்டங்களை மகளிரிடம் சரியான முறையில் கொண்டு செல்லாதது போன்றவை இவரது மாற்றத்துக்கு காரணங்களாக இருக்கலாம் என்ற தகவல்கள் பரவுகின்றன. இதை அவரது ஆதரவாளர்கள் மறுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை பாஜக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘பாஜகவில் ஒருவருக்கு கட்சிப் பதவி 3 ஆண்டுகள், அதிகபட்சம் 6 ஆண்டுகள் தான். அந்த காலக்கெடு முடிந்ததால் தான் தேசிய பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டார். மகளிர் அணி என்பது ஒரு சார்பு அணி தான். அதிலிருந்து விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு ‘பேரன்ட் பாடியான’ கட்சியில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம்.

அதேபோல், தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற பேச்சுக்கள் உலவுகின்றன. புதிய தலைவர் பட்டியலில் அஸ்வத்தாமன், பேராசிரியர் சீனிவாசன், வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை மாநில தலைவர் பொறுப்பும் கூட அவருக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன’’ என்றனர்.

இது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி முன்னாள் தலைவர் வானதி சீனிவாசன் கூறும்போது, ‘‘நான் கடந்த 2021 முதல் 26-ம் ஆண்டு வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் தேசிய மகளிரணி தலைவராக பதவி வகித்துள்ளேன். இக்காலகட்டத்தில் பாஜக தலைமை எனக்கு அளித்த அரசியல் ரீதியான அனைத்து பணிகளையும் திறம்பட நிறைவேற்றியுள்ளேன்.

தற்போது தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்தது என்பது வழக்கமான கட்சியின் நடைமுறை தான். பாஜக தேசிய தலைவராக இருந்த நட்டா புதிய தலைவர் வந்த பின்னர் விடுவிக்கப்பட்டார். அது போலத் தான் எனது மாற்றமும். என்னை பதவியில் இருந்து விடுவித்ததன் பின்னணியில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி உள்ளிட்ட எந்த அரசியல் காரணங்களும் இல்லை. வழக்கமான நடைமுறை தான்.

எனது உழைப்பையும், பணிகளையும் கட்சி நிச்சயம் பயன்படுத்தும் வகையில் வேறு பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். பொறுப்பு இல்லை என்றாலும், தொய்வின்றி எனது கட்சிப் பணி தொடரும்” என்றார்.

SCROLL FOR NEXT