சென்னை: திமுகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்குவதாக கூறி, ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியின் கணவர் சாலையில் படுத்து தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பா.வளர்மதியின் கணவர், வள்ளுவர் கோட்டம் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். சிறிது நேரத்தில், தனது ஆதரவாளர்களுடன் வள்ளுவர் கோட்டம் சந்திப்புக்குச் சென்ற அவர், திடீரென நடுரோட்டில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், “திமுக வேட்பாளர் எழிலனின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரகசியமாக டோக்கன் வழங்கி வருகின்றனர். தேர்தலுக்குப் பிறகு இந்த டோக்கன்களைக் காண்பித்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என ஆசை காட்டுகிறார்கள். இதுகுறித்து, புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த போராட்டம்” என தெரிவித்தார்.
போலீஸாரின் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து கலைந்து சென்றார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.