காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாக பேசுகிறார், அவர் பேசும் வார்த்தைகள் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிக்கப்பட்டிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக சார்பில் மண்டல அளவிலான தேர்தல் நிதியளிப்பு கூட்டம் வைகோ தலைமையில் நேற்று மதுரையில் நடைபெற்றது. மதுரை மாநகரம் சார்பில் ரூ.52 லட்சம் உட்பட மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் சார்பில் ரூ.1 கோடியே 38 லட்சம் நிதி அளிக்கப்பட்டது.
பின்னர், வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுக நேர்மையான அரசியலை நடத்துகிறார்கள் என நினைத்து மக்கள் தேர்தல் நிதி தருகின்றனர். மதிமுக பேச்சுவார்த்தை குழு அமைத்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போதுதான் எத்தனை தொகுதி என்பது தெரிய வரும். மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும். வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். அதில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி என்றபேச்சுக்கே இடமில்லை. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது தித்திப்பான செய்தி.
ஏற்கெனவே வலுவாக இருந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேமுதிக வருகையால் இன்னும் வலிமை பெறும். எதிர்தரப்பு கலகலத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாகப் பேசுகிறார். அவர் பேசும் வார்த்தைகள் எல்லாம் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துவதுபோல் உள்ளது. நாங்களும் திருப்பி அடிப்போம் என்று அவர்பேசுவது, ராமநாதபுரத்தில் 2 பேர் சண்டைபோட்டுக் கொண்டால் எப்படி பேசுவார்களோ அதுபோல் பேசுகிறார். அதனை அக்கட்சியினரே கண்டித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம்.
உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியினர் சொல்வதை எல்லாம் திமுக பொருட்படுத்தவில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் கொடுப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. திமுகவுக்கு முக்குலத்தோர் ஆதரவு முன்பிருந்ததைவிட அதிகரித்துள்ளது என்பது என்னுடைய கணிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.