ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டுமென ஒருபோதும் தப்பித் தவறிக்கூட பேசிய கிடையாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
திருச்சியில் ஜன.2-ம் தேதி சமத்துவ நடைபயணத்தை தொடங்கிய வைகோ, 12-ம் மதுரையில் பயணத்தை நிறைவு செய்கிறார். தனது 7-வது நாள் பயணத்தைத் தொண்டர் படையினருடன் மேலூர் அருகிலுள்ள கொட்டாம்பட்டியில் இருந்து வைகோ நேற்று காலை தொடங்கினார்.
அவருக்கு வழிநெடுகிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அது முறியடிக்கப்படும்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆணவம், அகம்பாவம் மிக்க வார்த்தைகளை தமிழ் மண்ணுக்கு வந்து சொல்லிவிட்டுப் போகும் துணிச்சல் வந்துள்ளது. விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ரிலீஸ் தாமதமாவதற்கும் திமுக அரசுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. எத்தனையோ திரைப்படங்கள் தணிக்கைத் துறையால் சிறிது தாமதம் செய்யப்படுகின்றன. அதுபோல நடந்திருக்கலாம்.
ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதை திமுகவோ, கூட்டணிக் கட்சிகளோ எதிர்க்கவில்லை. அவரவர் விருப்பம். பேச்சுரிமைக்கு என்ன அனுமதி உண்டோ. அது போன்று திரைப்பட தயாரிப்புக்கும் உரிமை உண்டு. அவர்கள் தாராளமாக வெளியிடலாம். திரையில் படம் ஓடட்டும்.
இதுவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென ஒருபோதும் ஒருசொல்கூட நானோ, இயக்கத்தின் முன்னணியினரோ தப்பித் தவறியும்கூட பேசியது கிடையாது. எங்களைப் பொறுத்தவரை அப்படியான கோரிக்கை நேற்று வரை எங்களிடம் இல்லை; இனியும் வைக்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.