

கார்த்தி சிதம்பரம் | கோப்புப் படம்
ஆட்சியில் பங்கு கேட்பது என்பது புதுமையான கோரிக்கை கிடையாது. அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் தங்களுடைய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என விரும்புவது இயற்கை தான் என காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சியில் பங்கு கேட்பது என்பது புதுமையான கோரிக்கை கிடையாது. அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் தங்களுடைய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என விரும்புவது இயற்கை தான். பாஜக-வுடன் கூட்டணி வைத்த பிறகு, அதிமுக-வுக்கு இருந்த சுதந்திரம் பறிபோய்விட்டது.
தப்பித் தவறி அவர்கள் ஆட்சி அமைத்தால் கூட அந்த ஆட்சியை பாஜக தான் கட்டுப்படுத்தும். ஒவ்வொரு சீசனுக்கும் பறவைகள் வந்து செல்வது போல, தேர்தல் நேரத்தில் பிரதமரும், மத்திய அமைச்சர்களும் அடிக்கடி தமிழகம் வந்து செல்வார்கள். தமிழ் மொழி, கலாசாரம் மீது மிகுந்த பாசம் இருப்பது போல் பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரு கட்சியில் இருந்து கொண்டு மற்ற கட்சியினருடன் பேசுவது தவறாகாது. சீமான், அன்புமணி போன்றோர்கூட எனக்கு நண்பர்கள் தான். நாங்கள் பேசிக் கொள்வோம். அதையெல்லாம் அதிகாரபூர்வ தேர்தல் பேச்சுவார்த்தையாக எடுத்துக் கொள்ள முடியாது. பிரபலமான நடிகர் என்பதால் விஜய்க்கு ஆதரவு அதிகரித்துள்ளது. வாக்குகளும் கிடைக்கும். ஆனால், அதுவே வெற்றியாக மாறுமா என்பது கேள்விக்குறிதான்.
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த என்னிடம் பல திட்டங்கள் உள்ளன. அதை கட்சித் தலைமை ஏற்குமா என்று எனக்குத் தெரியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டும். மக்கள் ஏற்கும் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தாதது குறைதான்” என்றார்.