புத்தாண்டையொட்டி திருச்சியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. உடன், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ. படம்: ர.செல்வமுத்துகுமார்
கூட்டணி விவகாரத்தில் லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சமத்துவ நடைபயணம் மேற்கொள்வதற்காக நேற்று திருச்சி வந்த வைகோ, புத்தாண்டையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: தமிழகம் திராவிட இயக்க பூமி. பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் சமய நல்லிணக்கத்தை பேணிக் காத்தார்கள். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையைநிர்மூலமாக்கும் வேலையை இந்துத்துவ சக்திகள் செய்து வருகின்றன. தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காக்கவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் 10 முறை நடைபயணங்கள் மேற்கொண்டுள்ளேன். பல்வேறு வழக்குகள் தொடர்ந்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்.
சமய நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்க முயற்சிக்கும் இந்துத்துவசக்திகளை தடுக்க வேண்டும் என்பதற்காகவே, நாளை (இன்று) சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்கிறோம். நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைக்கிறார். நடை பயணம் 10 -வது நாளில் மதுரையில் நிறைவடையும். இந்த நடைபயணம் மதிமுக-வின் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருக்கும். நடைபயணத்தில் திமுக அரசுக்கு ஆதரவாகவும், சமய நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையிலும் பிரச்சாரம் செய்வோம்.
வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாகத் தான் இருக்கிறார்கள். எனினும், திருத்தணி சம்பவம், தமிழகத்துக்கு அவமானத்தை தந்துள்ளது. இதுபோல் இனி நடக்காமல் இருக்க இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி நெருக்கடியை உருவாக்குகிறது. இருந்தபோதும் அதை சமாளித்து பல திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.
கூட்டணி விவகாரத்தில் லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. கூட்டணிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த கருத்தையும் நாங்கள் கூற மாட்டோம். தமிழகத்தில் யார் எவ்வளவு பெரிய கூட்டம் கூட்டினாலும் திமுக தான் நிச்சயம் வெற்றி பெறும். சாகித்ய அகாடமி விருது வழங்குவது குறித்து மத்திய அரசே இனி முடிவெடுக்கும் என கூறப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்பி-யுமான துரை வைகோ, “பிரவீன் சக்கரவர்த்தி தமிழகத்தின் பொருளாதாரம் குறித்து வைத்த விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது தவறான கருத்து, கண்டனத்துக்குரியது எனக் கூறினேன். காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் பேசும் பிரவீன் சக்கரவர்த்தி மீது அக்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உள்ளேன். மற்றபடி காங்கிரஸ் கட்சி குறித்து நான் எந்த விமர்சனமும் வைக்கவில்லை. பிரவீன் சக்கரவர்த்தி கருத்து குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்து. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியை வைத்துத் தான் கடன் தொகையை பார்க்க வேண்டும். வரம்புகளுக்குட்பட்டு தான் தமிழக அரசு கடன் வாங்கி உள்ளது” என்றார்.