புதுக்கோட்டை: அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் முந்தைய திமுக அரசு செயல்படுத்தி வந்த வானவில் மன்றம் திட்டத்தை தவெக அரசு செயல்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவ- மாணவிகளிடம் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் முந்தைய திமுக அரசு வானவில் மன்றம் எனும் திட்டத்தை 2022, நவ.28-ம் தேதிசெயல்படுத்தியது. இத்திட்டத்தை திருச்சியில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
‘‘எங்கும் அறிவியல், யாவும் கணிதம்’’ என்பதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ.25 கோடி நிதியை அரசு ஒதுக்கியது. கடந்த கல்வி ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் 25 லட்சம் பேர் பயன்பெற்றதாக முந்தைய தமிழக அரசு தெரிவித்தது.
இத்திட்டத்தில் பரிசோதனைக் கருவிகளுடன் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு செயல்வழிக் கல்வி அளிக்க தமிழகம் முழுவதும் ஸ்டெம் கருத்தாளர்கள் 710 பேர் பணியாற்றினர். ஆனால், நிகழ்கல்வியாண்டில் இதுவரை இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஒருவர் கூறியது: மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து படிக்கும் முறையில் இருந்து விடுபட்டு, செயல்பாடுகள் மற்றும் அனுபவங்கள் மூலம் கற்க இத்திட்டம் வழிவகுத்தது. மாணவப் பருவத்திலேயே அறிவியல் சிந்தனை மற்றும் பகுத்தறியும் திறனை வளர்த்தெடுக்கும் வகையில் அமைந்திருந்தது.
மேலும், மாணவர்களிடம் கண்டுபிடிக்கும் திறனையும், புதிய கருவிகளை உருவாக்கும் ஆர்வத்தையும் வெளிக்கொணர்ந்தது. வகுப்பறையில் கற்றுக்கொள்ளும் கணிதம் மற்றும் அறிவியல் விதிகளை அன்றாட வாழ்க்கையுடனும், இயற்கையுடனும் தொடர்புபடுத்தி எளிமையாக புரிந்து கொள்ள உதவியது.
இதன் பயனை அறிந்த சில தனியார் பள்ளிகள்கூட, தங்கள் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கின. ஆனால், ஏனோ இந்தத் திட்டம் நிகழ் கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படவில்லை என்றார்.
இதுகுறித்து பள்ளிகளில் கற்பித்து வந்த வானவில் மன்ற திட்ட கருத்தாளர்கள் கூறியது: மாநிலக் கருத்தாளர்கள் மற்றும் கல்வித் துறை அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் நேரில் சென்று படங்கள் மூலம் பாடங்களை விளக்கியும், செயல்விளக்கங்கள் அளித்தும் கற்பித்து வந்தோம். இதற்காக மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கப்பட்டது. ஆனால், நிகழ் கல்வியாண்டில் இதுவரை இத்திட்டம் தொடங்கப்படவில்லை.
இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா அல்லது கைவிடப்பட்டுவிட்டதா என்றும் எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. வேலைவாய்ப்பு அடிப்படையில் நாங்கள் 710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மாநிலக் கருத்தாளர்கள் கூறியது: வானவில்மன்றம் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. அதே வேளையில் கல்வித் துறை உயர் அலுவலர்களின் ஆலோசனையின் அடிப்படையில், கடந்தமுறை செயல்படுத்தப்பட்ட திட்ட அறிக்கையில் மாற்றங்கள் செய்து புதிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன்பிறகு அரசிடம் இருந்து எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை. திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அரசின் முடிவுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்றனர்.