தமிழகம்

2011-ல் கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றிக்கு உழைத்தவர்: 15 ஆண்டு காலம் காத்திருந்து முதல்வரை வீழ்த்திய வி.எஸ்.பாபு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கொளத்​தூர் தொகு​தி​யில் முதல்​வர் ஸ்டா​லினை தவெக வேட்​பாளர் வி.எஸ்​.​பாபு வீழ்த்​தி, 15 ஆண்டு ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாக தவெக வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இவர், கடந்த 2011 சட்​டப்​பேரவை தேர்​தலில், இதே தொகு​தி​யில் ஸ்டாலின் வெற்​றிக்​காக உழைத்​தவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. ஒரு காலத்​தில் திமுக​வில் வலு​வான தலை​வ​ராக இருந்​தவர் வி.எஸ்​.​பாபு. வடசென்னை மாவட்ட செய​லா​ள​ராக​வும் இருந்​தார்.

2006 சட்​டப்​பேரவை தேர்​தலில் புரசை​வாக்​கம் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆனார். தமிழகத்​தில் 2011 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு முன்​பாக நடை​பெற்ற தொகுதி மறு​வரையறை​யில், சென்​னை, புரசை​வாக்​கம் தொகு​தி​யின் சில பகு​தி​கள் மற்​றும் வில்​லி​வாக்​கம் தொகு​தி​யின் சில பகு​தி​கள் சேர்த்து புதி​தாக கொளத்​தூர் தொகுதி உதய​மானது.

புரசை​வாக்​கம் தொகுதி நீக்​கப்​பட்​டது. இதனால், 2011 சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக சார்​பில் வி.எஸ்​.​பாபு போட்​டி​யிட திட்​ட​மிட்​டிருந்​தார்.

இதற்​கிடை​யில், ஆயிரம் விளக்கு தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வந்த மு.க.ஸ்​டா​லின், கடந்த 2011 தேர்​தலில் வெற்​றியை உறுதி செய்ய, தொகுதி மாறி போட்​டி​யிட வேண்​டும் என கட்சித் தலைமை வலி​யுறுத்​தி​யது. அதன் பிறகு, வெற்றி வாய்ப்​புள்ள தொகு​தி​யாக கொளத்​தூர் கண்​டறியப்​பட்​டது.

அப்​போது, வடசென்னை மாவட்டச் செய​லா​ள​ராக இருந்த வி.எஸ்​.​பாபு​வின் கட்சி அதி​கார பரப்​பில் கொளத்​தூர் தொகுதி இடம் பெற்​றிருந்​தது. அப்​போதைய முதல்​வர் மு.கருணாநி​தி​யின் மகன் போட்​டி​யிடு​வ​தால், அதை வி.எஸ்​.​பாபு​வால் எதிர்க்க முடிய​வில்​லை. ஸ்டா​லின் வெற்​றிக்​காக உழைக்க வேண்​டிய நிர்​பந்​தம் ஏற்​பட்​டது.

அதே நேரத்​தில், ஸ்டா​லின் போட்​டி​யிடு​வ​தால், தனக்கு வாய்ப்பு மறுக்​கப்​பட்​டது அவருக்கு ஏமாற்​றத்​தை​யும், வருத்​தத்​தை​யும் தந்​தது. தனது கடும் உழைப்​பால், ஸ்டா​லினுக்கு வெற்​றியை​யும் பெற்​றுத் தந்​தார். ஆனால், சுமார் 2 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​திலேயே அந்த வெற்​றியை ஸ்டா​லி​னால் பெற முடிந்​தது.

இதனால், ஸ்டா​லினின் கோபத்​துக்கு உள்​ளா​னார் வி.எஸ்​.​பாபு. அந்த நேரத்​தில், அதி​முக​விலிருந்து ஜெயலலி​தா​வால் நீக்​கப்​பட்ட பி.கே.சேகர்​பாபு திமுக​வில் இணைந்​தார்.

இவர் ஸ்டா​லினுக்கு நெருக்​கம் காட்​டிய வேளை​யில், ஸ்டா​லின் -வி.எஸ்​.​பாபு இடையே மோதல் முற்​றிய​தால் திமுக​விலிருந்து வி.எஸ்​.​பாபு வெளி​யேறி, அதி​முக​வில் இணைந்​தார்.

ஜெயலலி​தா​வின் மறைவுக்கு பிறகு, கட்​சி​யில் அவருக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட​வில்​லை. 2017-ல் நடை​பெற்ற ஆர்​.கே.நகர் இடைத்​தேர்​தலில் டிடிவி தினகரனுக்கு ஆதர​வாக பணி​யாற்​றிய​தாக கூறி, 2018-ம் ஆண்டு வி.எஸ்​.​பாபு உள்​ளிட்ட 168 பேர் அதி​முக​விலிருந்து நீக்​கப்​பட்​டனர்.

பின்​னர், பழனி​சாமி பொதுச்​செய​லா​ள​ராக பொறுப்​பேற்ற பிறகு, அதி​முக​வில் வி.எஸ்​.​பாபு இணைந்​தார். ஸ்டா​லினை எதிர்க்க வலு​வான வேட்​பாளர் தேவை எனக் கரு​தி, இவருக்கு மாவட்டச் செய​லா​ளர் பொறுப்பை பழனி​சாமி வழங்​கி​னார்.

தேர்​தல் நெருங்கி வரும் வேலை​யில், இவரது மாவட்டச் செய​லா​ளர் பதவி பறிக்​கப்​பட்​ட​தால், அதி​முக​விலிருந்து வெளி​யேறி தவெக​வில் இணைந்​து, முதல்​வர் ஸ்டா​லினை எதிர்த்து போட்​டி​யிடும் வாய்ப்பை பெற்​றார்.

இந்த தேர்​தலில் ஸ்டா​லினை வீழ்த்தி வெற்​றி​யும் பெற்​றுள்​ளார். இதன் மூலம் 15 ஆண்டு பகையை தீர்த்​துக் கொண்​ட​தாக தவெக வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

SCROLL FOR NEXT