சென்னை: டிஜிட்டல் மோசடிகளில் இருந்து தப்பிக்க சமூக வலைதளங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு சைபர் குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னை காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு சார்பில் நேற்று முன்தினம் மாலை, திருவான்மியூர் கிழக்கு காமராஜர் நகரில் உள்ள ரமணியம் சமர்ப்பண் அடுக்குமாடி குடியிருப்பில் இணையவழி குற்றங்கள், மோசடிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் கே. உஷாராணி தலைமையிலான போலீஸார் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று குடியிருப்பு வாசிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
குறிப்பாக, டிஜிட்டல் கைது மோசடி, ஆன்லைன் முதலீட்டு மோசடி, ஆன்லைன் வர்த்தக மோசடி, பாஸ் மோசடி, பரிசுப் பொருள் மோசடி, கூரியர் மோசடி மற்றும் திருமணம் தொடர்பான மோசடிகள் குறித்தும், இத்தகைய மோசடிகளில் சிக்காமல் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இணையவழி பண மோசடிகளால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும், www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் குடியிருப்பு வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், நிகழ்ச்சியின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்குச்சரியான பதில்களை அளித்த பங்கேற்பாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.