திருமாவளவன்
சென்னை: ‘திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஏற்பதற்கு தவெக அரசு வலியுறுத்த வேண்டும்’ என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நீட் தேர்வே கூடாது என்பது தான் தமிழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், தமிழக அரசின் கோரிக்கை. திமுக ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், இப்போதைய அரசும் அதை வழிமொழிய வேண்டும். அந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் ஏற்பதற்கு வலியுறுத்த வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது. இன்று அரசியல் சார்பற்ற முறையில் மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் என்று பலரும் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். இவர்களின் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும்.
முதல்வர் மீது நம்பிக்கை: நம்முடைய கோரிக்கைதான் தமிழக அரசின் கோரிக்கை என்பதை நாம் அறிகிறோம். முதல்வர் இதற்கு எதிராக இல்லை. மாணவர்களின் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு ஒருபோதும் எடுக்காது, பாஜக அரசின் நிலைப்பாட்டுக்கு ஒருபோதும் ஆதரவு அளிக்காது என்கிற நம்பிக்கை இருக்கிறது. விரைவில் அதை முதல்வரோ அல்லது அவருடைய சார்பிலோ வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “நீட் ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைதான் எப்பொழுதுமே எடுத்திருக்கிறோம் திமுக ஆட்சி காலத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றினோம்.
ஆனால் முதலில் ஆளுநர் கையெழுத்து போட மறுத்தார், தற்போது குடியரசு தலைவரிடம் நிலுவையில் உள்ளது. நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது மத்திய அரசு வன்முறையை கட்டவிழ்த்து உள்ளது. தமிழகத்திலும் அதேபோல நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு அமைதி காப்பதைப்பார்க்கும்போது ‘இது மவுனமான நேரம்’ பாடல்தான் நினைவுக்கு வருகிறது” என்றார்.