சென்னை: சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள், முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை ரூ.25 ஆயிரம் பெற இன்று (வெள்ளி) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணி தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யுபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வு ஊக்கத்தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின்கீழ், 2026-ம் ஆண்டு யுபிஎஸ்சி குடிமைப்பணி, இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு இந்த ஆண்டுகுடிமைப்பணி, இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் ஆன்லைன் மூலம் (https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/) ஜூன் 19 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.