மயிலாப்பூர் தொகுதியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். | படம்: எல். சீனிவாசன் |
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் ‘விஜய்’ நமக்குத்தான், வெற்றியை குறிப்பிடுகிறேன், நடிகரை அல்ல என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார். தமிழக பாஜக சார்பில் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல், அதிமுக, அமமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பியூஸ் கோயல் பேசியதாவது: தமிழகத்தில் நாம் எதிர்கொள்ளும் இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. இது தமிழகத்தின் விதியை, தமிழ் பண்பாட்டை மற்றும் நமது குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் தேர்தல்.
தமிழகம் செழிக்க வேண்டும், ஒவ்வொரு மனிதனின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து செயல்படுகிறது.
டெல்லியில் ஒரு இ்ன்ஜின் (மத்திய அரசு), சென்னையில் ஒரு இன்ஜின் (மாநில அரசு) என ‘இரட்டை இன்ஜின்’ அரசு அமைந்தால், தமிழகத்தின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் இருக்கும். பிரதமர் மோடியின் திட்டங்கள் தமிழக மக்களை முழுமையாக சென்றடையும்.
நாம் அனைவரும் ஜெயலலிதாவுக்கு கடமைப்பட்டுள்ளோம். 2021-ல் நடந்த தவறு மீண்டும் நடக்கக்கூடாது. திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சொல்லொண்ணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் மிக மோசமான ஊழலை சந்தித்துள்ளது. பொருளாதாரம் சீர்குலைந்து, சட்டம் ஒழுங்கு சிதைந்துவிட்டது. பழனிசாமி தலைமையிலான நல்லாட்சி அமைய வேண்டியது அவசியம்.
உதயநிதி ஸ்டாலின், ஒருபோதும் தமிழ் பண்பாட்டையோ, மக்களின் உணர்வுகளையோ மதிக்கத் தெரியாதவர். அவர் முதல்வரானால் அது தமிழகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், சென்னையில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் மாற்றி, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தரமான வீடுகள் கட்டித் தரப்படும்.
நாம் அனைவரும் ஒரு குழுவாக செயல்பட்டால், இந்தத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று வலுவான ஆட்சியை அமைப்போம். மக்கள் நடிகர்களைப் பார்க்க வருவார்கள், கைகாட்டுவார்கள். ஆனால் அவர்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்.
இதற்கு முன்பு கமல்ஹாசன் வந்தபோது அவருக்கு எத்தனை சதவீத ஓட்டு கிடைத்தது? எனவே, நடிகர்களைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். ‘விஜய் நம்முடையது’. நடிகர் விஜய்யை சொல்லவில்லை. வெற்றியை சொல்கிறேன், விஜயத்தை சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, ''2026-ல் இரட்டை இலையோடு தாமரை மலரும். இரட்டை இலை ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் பழனிசாமி ஆட்சி அமைக்கும்போது, பிரதமர் மோடியை அழைத்து சட்டப்பேரவையில் செங்கோலை நிறுவுவோம்'' என்றார்.