படம்: எம்.சாம்ராஜ்

தமிழகம்

“மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்களை உருவாக்க இலக்கு” - புதுச்சேரியில் ஜே.பி.நட்டா பேச்சு

அ.முன்னடியான்

புதுச்சேரி: “எதிர்காலத்தில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையில் சமநிலையை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம்” என மத்திய அமைச்சர் அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மேலும், “2029-ம் ஆண்டுக்குள் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஜிப்மர் நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழா, அந்நிறுவன வளாகத்தில் உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பிஎச்டி, டிஎம், எம்டி, எம்எஸ், எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அரசு கொறடா ஆறுமுகம், தலைமை செயலர் சரத் சவுகான், ஜிப்மர் தலைவர் சித்ரா சர்கார், இயக்குர் வீர்சிங் நேகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேசும்போது, “நாட்டில் 2017-க்கு முன்பு நோய் தீர்க்கும் சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வந்தது. சாதாரண மக்களுக்கும் தரமான, மேம்பட்ட சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் கவனம்.

அதையொட்டிதான் 2017-ம் ஆண்டு கொண்டு தேசிய சுகாதாரக் கொள்கை கொண்டு வரப்பட்டது. நோய் வராமல் தடுத்தல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பின்னர்தான் நோய் தீர்க்கும் சிகிச்சை என்று இந்தக் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், இந்தக் கொள்கை ஏராளமான மாற்றங்களைக் கொண்டது. மேலும், எல்லா சிகிச்சைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

ஒரு குழந்தை குறிப்பிட்ட தடுப்பு ஊசி எடுக்கவில்லையென்றால் குறிப்பிட்ட தாய், ஆஷா பணியாளர், சுகாதார அதிகாரிகள், மத்திய சுகாதார அமைச்சகம் வரை எச்சரிக்கை தகவல் அனுப்பப்படுகிறது. இதுதான் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கை.

நாட்டில் ஓர் அகில இந்திய மருத்துவ நிறுவனம் இருந்த நிலையில் 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாய் 6 மருத்துவ நிறுவனங்களைத் தொடங்கினார். பிரதமர் நரேந்திர மோடி 16 மருத்துவ நிறுவனங்களைத் தொடங்க முயற்சி எடுத்தார்.

இப்போது 23 அகில இந்திய மருத்துவ நிறுவனங்கள் இருக்கின்றன. அதற்கு முன்பு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு மருத்துவப் படிப்புகளுக்கும், ஆராய்ச்சிக்கும் மாணவர்கள் செல்லும் நிலை இருந்தது. இப்போது இந்தியாவிலேயே எல்லா ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளும் வகையில் சிறந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளன.

2018-ம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 42 கோடி பேருக்கு பல்வேறு நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் சுகாதாரத் துறையைப் பெருமளவில் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் இளம் மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் வரும் நோயாளிகளின் விவரங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். மின்னணு மருந்துச் சீட்டு முறையைப் பின்பற்ற முன்வர வேண்டும்.

ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் எனப்படும் சுகாதாரக் கணக்கு திட்டத்தின் கீழ் இதுவரை 129 கோடி சுகாதாரக் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நோயாளியின் மருத்துவ ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ஆதார் கட்டமைப்புடன் தொடர்புடைய சுகாதார அடையாள அமைப்பின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.

மேலும், சுகாதார செலவு 64 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாகக் குறைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 63 கோடி மக்களுக்குச் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை மருத்துவச் சிகிச்சைகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றமும், குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சி. மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களும் கணிசமாக அதிகரித்துள்ளன. முன்பு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 51,000 இடங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அவை 1 லட்சத்து 43 ஆயிரமாக அதிகரித்துள்ளன.

மேலும், 2029-ம் ஆண்டுக்குள் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை எட்டுவதற்கான பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.

முன்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 31,000 இடங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 91,572 ஆக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையில் சமநிலையை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாக உள்ளது.

இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதுடன், அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்துவதே அரசின் நோக்கம். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், மருத்துவக் கல்விக்கான இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் 10,000 கூடுதல் இடங்களை உருவாக்குவதற்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மருத்துவக் கல்வி இடத்திற்கும் நான்கு ஆண்டுகளுக்கு சுமார் ரூ.1.5 கோடி செலவாகிறது. இதன் மூலம் மருத்துவக் கல்விக்காக அரசு மற்றும் சமூகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நிதி முதலீட்டை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, மருத்துவக் கல்வி என்பது தங்களுக்குக் கிடைத்த உரிமை என்று மட்டும் கருதாமல், சமூகத்தால் வழங்கப்பட்டுள்ள ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். சமூகத்தின் ஆதரவால் கல்வி கற்கும் நாம், அந்தச் சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடமையையும் கொண்டுள்ளோம்” என்று அவர் பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT