

புதுடெல்லி: இத்தாலியில் சோனியா காந்தி சிறுவயதில் வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாகிறது. அந்த வீட்டை விலைக்கு வாங்கிய சீக்கிய தொழிலதிபர் சுக்தேவ் சிங் காங் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறுவயதில் வாழ்ந்த வீடு இத்தாலியில் உள்ளது. இந்த வீட்டை அந்நாட்டில் வசிக்கும் சீக்கிய தொழிலதிபரான சுக்தேவ் சிங் காங், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். அவர் அந்த இல்லத்துக்கும், சோனியா காந்தி மற்றும் மைனோ குடும்பத்துக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பைப் பாதுகாக்க விரும்புவதாகக் கூறினார். இதற்காக அவர், இந்த இல்லத்தை விரைவில் அதிநவீன அருங்காட்சியகமாக மாற்றத் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து சுக்தேவ் சிங் ஒரு செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘நானும் எனது குடும்பத்தினரும் காந்தி குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள். இத்தாலியில் இருந்த எனது தொடர்புகள் மூலமாகவே இந்த வீட்டைப் பற்றி அறிந்துகொண்டேன்.
இந்த வீட்டை விற்க விரும்பியவர்கள், இது ஓர் இந்திய மற்றும் சீக்கியக் குடும்பத்திடம் செல்ல வேண்டும் என்று விரும்பினர். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்காக, காந்தி குடும்பத்திடமிருந்து சில நினைவுப் பொருட்களைப் பெற அவரை சந்திக்க விரும்புகிறேன்.
சோனியா காந்தி 1946-ம் ஆண்டு டிசம்பர் 6-ல் இதே வீட்டில்தான் பிறந்தார். சாம்பல் நிறக் கற்கள் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்ட ஆறு அறைகளைக் கொண்டது இந்த வீடு. சோனியா, தனது சிறுவயதில் இங்கேதான் கழித்தார்.
இத்தாலியின் விசென்சா மாகாணத்தில் உள்ள லுசியானா என்ற இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. இது பிரேசியாவில் உள்ள எனது இல்லத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் உள்ளது.
இந்தச் சொத்தை வாடகைக்கு விடுவது அல்லது குருத்வாராவாக மாற்றுவது போன்ற முன்மொழிவுகளைத் தனது குடும்பத்தினர் முன்பே நிராகரித்துவிட்டனர்’ எனத் தெரிவித்தார்.
சோனியா காந்தியின் சிறுவயது இல்லம் ‘இந்திய இல்லம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு இந்திய மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. வீட்டின் வெளியே உள்ள பெயர் பலகையில், ‘இது சோனியா காந்தி பிறந்த இடம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாபின் ஹோஷியார்பூரைச் சேர்ந்த சுக்தேவ் சிங், 1992-ஆம் ஆண்டு பஞ்சாபிலிருந்து இத்தாலிக்குக் குடிபெயர்ந்தார். அன்றிலிருந்து அங்கேயே வசித்து வருகிறார். தொடக்கத்தில் அவர் பால் பண்ணை, விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றியவர், தற்போது இத்தாலியின் தொழிலதிபராகிவிட்டார்.
இத்தாலியில் குடியேறுவது அவருக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை சுக்தேவ், சோனியா காந்தியின் சிறுவயது இல்லத்தை 2020-இல் தனது மனைவி மற்றும் மகளின் பெயரில் வாங்கி உள்ளார். வீட்டைப் பராமரிக்க அவர் ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் இந்த வீட்டிற்கு வர விரும்பினால், அந்தப் பொறுப்பாளர் அவர்களுக்கு உதவுகிறார்.
வரிகள் உட்பட, இந்த வீட்டைப் பராமரிக்க சுக்தேவ் ஆண்டுக்கு சுமார் 1,000 யூரோக்களைச் செலவிடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று பெரிய அளவிலான பொது நிகழ்ச்சியை சுக்தேவ் அந்த வீட்டில் ஏற்பாடு செய்து கொண்டாடுகிறார். அவர் அன்றிலிருந்து இன்றுவரை சோனியாவின் வீட்டை அப்படியே பராமரித்து வருகிறார். இந்த இடத்தை ஒரு நவீன அருங்காட்சியகமாக மாற்ற அவருக்கு சோனியாவின் குடும்பம் குறித்த போதிய தகவல்கள் இல்லாததால் அந்த விருப்பம் இன்னும் சாத்தியப்படவில்லை.
எனவே, சோனியா காந்தி மற்றும் அவரது பிள்ளைகளான ராகுல், பிரியங்கா ஆகியோரைச் சந்தித்து, அந்த அருங்காட்சியகத்தில் எந்தெந்த தனிப்பட்ட பொருட்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் பிற நினைவுப் பொருட்களை வைக்கலாம் என்பது குறித்து அறிந்துகொள்ள சுக்தேவ் சிங் காங் விரும்புகிறார்.