தமிழக ஆளுநர் அர்லேகர்
சென்னை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் அர்லேகரை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை யன்று ஒரே நாளில் 13 கொலைகள் நடைபெற்றன. தலைநகர் சென்னையில் நேற்று முன்தினம் மட்டும் 3 பேர் கொல்லப்பட்டனர். தொடர் குற்றச் சம்பவங்களால் ஆளும் தவெக அரசை, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து, உயரதிகாரிகளுடன் முதல்வர் விஜய் சென்னையில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி நூற்றுக்கணக்கான ரவுடிகளை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2-ம் நாளாக ஆலோசனை
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் விஜய் 2-வது நாளாக தலைமைச் செயலகத்தில் நேற்று காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் எம்.சாய்குமார், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், உளவுப் பிரிவு ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம், சமீபத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவங்கள் குறித்த விசாரணையின் நிலை, அரசியல் அழுத்தங்களால் கிடப்பில் போடப்பட்ட வழக்குகள், தொடர் குற்றங்
களைத் தடுப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. போதைப் பொருட்கள் தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்தவும் முதல்வர் விஜய், காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதற்கிடையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மாதந்தோறும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தரப்பில் அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். மாநிலத்தின் டிஜிபி மூலமாக தேவையான விவரங்களைச் சேகரித்து ஆளுநர் இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புவார். தவிர மத்திய உளவுப் பிரிவும் உள்துறைக்கு தனியாக அறிக்கை அளிக்கும்.
இந்நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழக ஆளுநர் அர்லேகரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், சமீப காலமாக தமிழகத்தில் நிகழ்ந்துள்ள வன்முறை சம்பவங்கள், மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்து அறிக்கை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.