கோப்புப்படம்
சென்னை: பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணையுமாறு தமிழகத்துக்கு மத்திய அரசு மீண்டும் கெடு விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த திட்டத்தில் மும்மொழிக் கொள்கை இருப்பதால் தமிழகம் இணைய மறுத்துவிட்டது. இதன் காரணமாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் மூலமாக தமிழகத்துக்கு தரவேண்டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்த விவகாரம் கடந்த திமுக ஆட்சியில் பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் தமிழக அரசுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தின்கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. தவெக தலைமையில் புதிய அரசு அமைய உள்ள சூழலில் மத்திய அரசு இந்த கடிதத்தை அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தவெக என்ன முடிவெடுக்கும், முந்தைய திமுக அரசுபோல எதிர்ப்பு தெரிவிக்குமா அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமா, நிறுத்தி வைக்கப்பட்ட கல்விக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையே, பள்ளிக்கல்வித் துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்கள், அதனால் பயன் பெற்றவர்கள், தேவையற்ற செயல்பாடுகள் தொடர்பான முழு விவரங்களை அறிக்கையாகத் தருமாறு, விரைவில் ஆட்சி அமைக்க உள்ள தவெக கேட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.