மதுரை: தாய் மொழியில் பயிற்றுவிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பங்கேற்ற பின்னர் நேற்று மதுரை வந்த அவர், மீனாட்சி அம்மன் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய கல்விக் கொள்கையானது 5-ம் வகுப்பு வரை மாநிலங்களின் தாய் மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. தமிழகத்திலும் 5-ம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதால், தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை என்பது மத்திய அரசுக்கும், தமிழகத்தில் உள்ள திமுக அரசுக்கும் இடையே சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதுதான் தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரை. இதை ஏற்று, திமுக அரசு தமிழ் மொழியை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
மும்மொழிக் கொள்கையின் கீழ் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி, தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் வகையில், தமிழக அரசு இரு மொழிக் கொள்கையாக மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையேயான இந்த மோதல், உச்ச நீதிமன்றத்தையும் எட்டியுள்ளது.
நவேதயா பள்ளிகள்… டிச. 15-ல் உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. பள்ளிகள் அமைப்பதற்குத் தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்யுமாறும் உத்தரவிட்டது.
கலை, பண்பாடு, கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி காசி தமிழ் சங்கமம் 4.0 விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். இது காசிக்கும், ராமேசுவரத்துக்கும் இடையிலான நாகரிகப் பிணைப்பாகும். எதிர்காலத்தில், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ அமையவும் வழிவகுக்கும்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு அரசியல் காழ்ப்புணர்வோடு செயல்படுகிறது.
இந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுப்பவர்களுக்கு சிவபெருமான் பாடம் புகட்டுவார். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுவாமி தரிசனம் செய்தார்.