மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நடைபெற்று வரும் யாகசாலை பூஜைகளை நேற்று கோயிலுக்கு வந்த திரளான பக்தர்கள் வரிசையில் சென்று பார்வையிட்டு தரிசனம் செய்தனர்.
படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும் வகையில் 4 ஆயிரம் உபயதாரர்கள் உள்ளிட்ட 11 ஆயிரம் பேருக்கு ‘பாஸ்’ வழங்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் இதுவரை ‘பாஸ்கள்’ வழங்காததால் கோயில் பணிகளுக்கு லட்சம், கோடி ரூபாய்கள் உபயம் வழங்கிய உபயதா ரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பின்பு நாளை (செப்.17) காலை 7.40 முதல் 8.10 மணியளவில் நடைபெறுகிறது. இதில் கோயிலுக்குள் 4 ஆயிரம் உபயதாரர்கள் மற்றும் விஐபிகள், அரசியல் வாதிகள், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குடும்பத்தினர் உள்ளிட்ட 11 ஆயிரம் பேரை மட்டும் அனுப்புவதற்கு 8 வகை ‘பாஸ்கள்’ தயாரிக்கப்பட்டுள்ளன.
அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் சுப்புலெட்சுமி, மீனா, செல்லையா, சீனிவாசன் ஆகியோர் அடங்கிய கோயில் நிர்வாகம் செயல்படுவதற்கு தவெக அரசுத் தரப்பில் முட்டுக்கட்டை போடப்படுவதாகவும், அமைச்சர் நிர்மல் குமார் நேரடியாகவே தலையிட்டு திமுகவைச் சேர்ந்த அறங்காவலர் களுக்கு கோயிலில் என்ன வேலை எனக் கேட்டு அதிகாரத்தை தனது கையில் வைத்துள்ளதாகவும், அவரது கண்ணசைவில்தான் கோயில் நிர்வாகம் இணை ஆணையர் க.செல்லத்துரை மூலம் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த திமுக ஆட்சியில் கோயில் நிதி மற்றும் உபயதாரர் நிதி என ரூ.28 கோடியில் குடமுழுக்கு திருப்பணிகளும், ரூ.35 கோடியில் வீரவசந்தராயர் மண்டபச் சீரமைப்புப் பணிகளும் என மொத்தம் ரூ.63 கோடியில் நடந்து வருகின்றன.
இதில் உபயம் அளித்த உபயதாரர்கள் ‘பாஸ்கள்’ கேட்டு கோயில் நிர்வாகமான அறங்காவலர் களிடம் கேட்கின்றனர். அறங்காவலர்கள் கைக்கு இதுவரை ‘பாஸ்கள்’கிடைக்காததால் ஏமாற்றத்துடன் உள்ளனர்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், அமைச்சர் தலைமையில் குடமுழுக்கு விழா ஆலோசனைக் கூட்டத்திலும் அறங்காவலர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பின்னர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள் பங்கேற்புடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆனாலும்,மீண்டும் அறங்காவலர்கள் புறக்கணிக்கப் படுவதாகவும், குடமுழுக்கு விழாவுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில் இன்னும் ‘பாஸ்கள்’ கிடைக்காமல் அறங்காவலர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து உபயதாரர்கள் கூறியதாவது: கோயில் திருப்பணிக்காக அறங் காவலர்கள் கேட்டுக்கொண்டதால் பல லட்சம் ரூபாய் உபயமாக அளித்துள் ளோம். பலர் கோடிக்கணக்கான ரூபாய் உபயம் அளித்துள்ளோம். ஆனால், எங்களுக்கு ‘பாஸ்கள்’ இதுவரை வழங்கவில்லை. கோயில் திருப்பணிக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி உபயம் வழங்கியுள்ளோம். ஆனால் எங்களை உதாசீனப்படுத்தும் வகையில் ‘பாஸ்கள்’ வழங்கவில்லை. அறங்காவலர்களிடம் கேட்டால் இன்னும் எங்களது கைகளுக்கு ‘பாஸ்கள்’ வரவில்லை என்கின்றனர்.
அமைச்சர் நிர்மல்குமார்தான் ‘பாஸ்கள்’ வழங்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளார். ஆன்மிகத்தில் அரசியல் செய்கிறார். அவரிடம் காரணம் கேட்டால் நான் கோயில் நிர்வாகத்தில் தலையிடவில்லை என்கிறார். எனவே, இறைவன் முன் அனைவரும் சமம். ஆனால், தவெகவினர் இதில் அரசியல் செய்கின்றனர். பாரபட்சமின்றி உபயதாரர்களுக்கு ‘பாஸ்கள்’ வழங்க வேண்டும்’’ என்றனர்.
செய்தியாளர்களுக்கு மறுப்பு; கவுன்சிலர்களுக்கு பாஸ் இல்லை
மதுரை மாவட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட தகவலில், ‘‘அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இந்துசமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக புதுமண்டபத்தில் இணையவழி நேரலை ஒளிபரப்பு இணைப்பு உள்ளிட்ட தேவையான வசதிகளுடன் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு விழாவில் செய்தியாளர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிதியில் இருந்து மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு தேவையான அடிப்படை வசதிப் பணிகள் நடக்கும் நிலையில், 100 வார்டு கவுன்சிலர்களிலில் ஒருவருக்குக்கூட விழாவில் பங்கேற்க பாஸ் வழங்கப்படவில்லை