‘அதிகாரப் போட்டியில் ஆளுக்கொரு பக்கம் ஆள், அம்பு, சேனையை திரட்டி நின்ற ‘பழக்’ கட்சியின் அப்பாவும் மகனும் அண்மையில் ஆரத் தழுவி ஆற்றாமையை கண்ணீராய் கொட்டினார்கள். ஆனால், இந்த சங்கமத்தை ‘அய்யா’வின் ‘மதியான’ மகளும் அவரது விசுவாசிகளும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இன்னமும் தகிப்பில் இருக்கிறார்களாம். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி, கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தாராம் ‘சின்னவர்’.
இந்தக் கூட்டத்துக்கு ‘மதியான’வருக்கும் அவருக்கு உற்ற துணையாய் நிற்கும் ‘மணியான’வருக்கும் அழைப்பு இல்லையாம். அதேசமயம், ‘அய்யா’ தரப்பின் ‘சங்கரமான’ துணைப் பொறுப்பாளருக்கு அழைப்பு விடுத்திருந்தார்களாம். ஆனால், “அவர்கள் இல்லாமல் தன்னால் வரமுடியாது” என்று அவர் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.
இதனால், தோட்டத்துக்குள் தேவையற்ற குழப்பம் வரலாம் என்பதால் ஆலோசனைக் கூட்டத்தையே ரத்து செய்துவிட்டாராம் ‘சின்னவர்’. மருத்துவ சிகிச்சையில் இருக்கும் ‘அய்யா’ தோட்டம் திரும்பியதும் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறாராம். ‘சின்னவர்’.
இதனிடையே, ஆளுக்கொரு பக்கமாய் கட்சி கட்டிக் கொண்டு நிற்கும் ‘மதியான’ அக்காவையும் தம்பி ‘சின்னவரையும்’ சமாதானம் செய்துவைக்க தோட்டத்து உறவுகள் கூடிப் பேசி வருகிறார்களாம்.
இதையடுத்து, இவர்கள் எல்லாம் எப்படியும் ஒன்றுக்குள் ஒன்றாகி விடுவார்கள் என்று ஊகித்துவிட்ட ‘மணியான’வரும் மாம்பழத்து ஊரின் ‘அருளான’வரும் தனி ரூட் எடுப்பது குறித்து யோசித்து வருகிறார்களாம். இவர்கள் அறிவாலயத்துக்கு அப்ளிகேஷன் போட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.