உதயநிதி ஸ்டாலின்
சென்னை: பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டிலும், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தத்திலும் நடைபெற உள்ள பேரணிகளுக்கு தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும் தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?
பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?
காவல்துறை, முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?
பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் Reels முதல்வர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.