தமிழகம்

மயிலாப்பூரில் பிரச்சாரத்தை பழனிசாமி தொடங்கியது ஏன்? - உதயநிதி காரணம் சொல்கிறார்

செய்திப்பிரிவு

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மயிலாப்பூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது ஏன் என்பதற்கு துணை முதல்வர் உதயநிதி காரணம் சொல்லியிருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்துக்காகக் காஞ்சிபுரம் வந்த துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் காஞ்சிபுரத்தில் அண்ணா இல்லத்துக்குச் சென்றார். தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

தேரடி அருகே அவர் பேசியதாவது: இப்போது நடக்கும் தேர்தல் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் நடக்கும் தேர்தல். மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு என்ற பெயர் கூட அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை.

அண்ணா பிறந்த இந்தக் காஞ்சிபுரத்தில் இருந்து நான் எனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளேன். அதேபோல், முதல்வர் ஸ்டாலின் திருவாரூரில் இருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தனது பிரச்சாரத்தை எங்கிருந்து தொடங்கினார் தெரியுமா?

பாஜக போட்டியிடும் மயிலாப்பூரில் இருந்துதான் அவர் தனது பிரச்சாரப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். நமக்குக் கொள்கைத் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி என்றால் அவருக்குக் கொள்கைத் தலைவர்கள் மோடியும், அமித் ஷாவும்தான். அதனால்தான் அவர் தனது பிரச்சாரத்தை பாஜக போட்டியிடும் மயிலாப்பூரில் இருந்து தொடங்கினார்.

இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தமிழக விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் பாஜகவிற்கும் நடக்கும் போராட்டம். தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், சமூக நீதியைக் காக்கவும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT