உதயநிதி ஸ்டாலின்
காலில் விழுவது தவறில்லை, சசிகலா காலை பழனிசாமி வாரி விட்டதுதான் தவறு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் நேற்று திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் நான் எங்கே பிரச்சாரத்துக்கு சென்றாலும், ஒரு போட்டோவை காட்டுமாறு மக்கள் கேட்கின்றனர். அவர்கள் கேட்பதால் காண்பிக்கிறேன். பதவிக்காக யார் காலிலும் விழும் அனுபவம் எனக்கு இல்லை.
‘முதல்வர் பதவியை சசிகலா கொடுத்தார், அதனால் காலில் விழுந்தேன், அதில் என்ன தவறு?’ என பழனிசாமி கேட்கிறார். காலில் விழுவது தவறில்லை. முதல்வர் பதவிக்கு வந்ததும், சசிகலா காலை வாரி விட்டதுதான் தவறு. இந்த விவகாரத்தில், ‘தம்பி உதயநிதி பேசியதில் என்ன தவறு?’ என சசிகலா தற்போது கேட்டு வருகிறார். நாம் அமைதியாக வேடிக்கை பார்ப்போம்” என்றார்.