தஞ்சாவூர்: திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வந்த தவெக தலைவர் விஜய்யின் காரை பின் தொடர்ந்த போது விபத்தில் சிக்கி 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர் அருகே நேற்று தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து காரில் கூட்டம் நடந்த பகுதிக்கு வந்தார்.
அப்போது, அவரது வாகனத்தின் முன்பும், பின்பும் ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்தனர். இதில், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வளப்பகுடி வந்தபோது, திருச்சி கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், அவரது நண்பர் ஷாருண் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் சென்டர் மீடியனில் மோதியது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, தவெக கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சாலியமங்கலம் அருகே உள்ள கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த கலைமணி, முத்து, துர்கா ஆகியோர் ஒரே பைக்கில் வீடு திரும்பினர்.
வல்லம் புதூர் பகுதியில் விபத்தில் சிக்கி காய மடைந்தனர். இவர்களும் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்துகள் குறித்து செங்கிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.