ஓபிஎஸ் வீட்டின் முகப்பு பகுதியின் வண்ணத்தை மாற்றும் ஊழியர்கள்.
பெரியகுளம்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டின் இரும்புக் கதவில் பொருத்தப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம், இரட்டை இலை சின்னம் ஆகியவை இயந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டன.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கடந்த 27-ம் தேதி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவருடன் அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர்.
இதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முகப்பு இரும்புக் கதவில் பொருத்தப்பட்டு இருந்த ஜெயலலிதா படம், இரட்டை இலைச் சின்னம் உள்ளிட்டவை வெட்டி எடுக்கப்பட்டன.
வீட்டின் முகப்பில் கருப்பு, சிவப்பு, வெள்ளை வண்ணமும் மாற்றப்பட்டது. திமுகவில் இணைந்த பிறகு முதல்முறையாக நேற்று மாலை தனது சொந்த மாவட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.
அவருக்கு மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய், ஆண்டிபட்டி, க.விலக்கு, தேனி, போடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.