பி.வி.பாலசுப்ரமணியம், டி.கவுதமன், ஜான் சத்யன்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெறும் வழக்குகளில் தமிழக அரசின் சார்பில் ஆஜராகி வாதிட ஏதுவாக 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்தார். அதேபோல, அரசு தரப்பின் பல்வேறு வழக்கறிஞர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அந்தப் பதவிகளுக்கு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவருடைய பரிந்துரைப்படி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் வழக்குகளில் ஆஜராகி, வாதிட ஏதுவாக மூத்த வழக்கறிஞர்கள் பி.வி.பாலசுப்பிரமணியம், டி.கவுதமன் ஆகியோரை கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் அந்தஸ்தில் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யனை நியமித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.