சென்னை: பழனிசாமி மீதான கோபத்தாலும், சவுமியா அன்புமணி அமைச்சராகும் தகவலால் மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு பாமகவின் வாக்குகள் சென்றுள்ளன.
இரு தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பாமக வைத்துள்ளதால், அவை யாருக்குச் செல்லும் என்ற நிலை ஏற்பட்டது. தவெக அரசுக்கு ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை வைப்பதையும்,
அமைச்சரவையில் இடம் பெற்றாலும் அவ்வப்போது விசிக தலைவர் விமர்சனம் செய்வதையும் முதல்வர் விஜய் விரும்பவில்லை. எனவே 4 எம்எல்ஏக்கள் வைத்துள்ள பாமகவை, கூட்டணியில் சேர்க்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 2 மாதமாக தவெக கூட்டணியில் பாமக இணைய இருப்பதாகவும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் சவுமியா அன்புமணி அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் பாமக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், பாமகவின் வாக்குகள் தவெக வேட்பாளர்களுக்கு சென்றுள்ளன.
இதுதொடர்பாக பாமகவினரிடம் கேட்டபோது, “2021-ம் ஆண்டில் அதிமுக ஆட்சி கடைசி நேரத்தில் வன்னியர்களுக்காக 10.5 சதவீத இடஒதுக்கீட்டை, அப்போதையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். ஆனால், அது கிடைக்காமல் போய்விட்டது. அதுதொடர்பாக பழனிசாமி இதுவரை பேசவில்லை.
இதனால், வன்னியர் சமூகத்தினரும், பாமகவினரும் அதிமுக தலைமை மீது கோபத்தில் உள்ளனர். மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர் தமிழக அரசு சமூகநீதி கணக்காய்வினை நடத்தும் என்று தவெக அரசு அறிவித்தது.
இதற்காக, தவெக அரசை பாமக பாராட்டியது. அதனால், மதுராந்தகம், தாராபுரத்தில் பாமகவின் வாக்குகள் தவெக வேட்பாளர்களுக்கு சென்றுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.