சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் - எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் கூ.பிரேம்குமாரை ஆதரிப்பதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: “என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கூ.பிரேம்குமார், நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான்.
எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான கூ.பிரேம்குமாரையும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் கூ.பிரேம்குமாரை மனதளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.
நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு:
முன்னதாக, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுக வேட்பாளர் காசி, தவெக வேட்பாளர் அருண்குமார், நாதக வேட்பாளர் பிரியதர்ஷினி மற்றும் சுயேச்சைகள் உள்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனு பரிசீலனையில் தவெக வேட்பாளர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளர் அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளரின் வேட்புமனுவை அதே தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனுவில் 8 பேர் மட்டுமே முன்மொழிந்திருந்தனர். எனவே, தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் உத்தரவிட்டார்.
திமுக மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய அருண்குமார், திடீரென தவெகவில் இணைந்து எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், அவர் தனது வேட்புமனுவை வேண்டுமென்றே கவனக்குறைவாக தாக்கல் செய்துவிட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். அவரது மனு நிராகரிக்கப்பட்டதால், தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், தவெக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில் சுயேச்சை வேட்பாளரை தவெக ஆதரித்துள்ளது.