தவெக தலைவர் விஜய் சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே ரோடு ஷோவில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தனக்காக காத்திருந்த புதுமண தம்பதியை பிரச்சார வாகனத்துக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து, விஜய் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வழிநெடுகிலும் திரண்டு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தவெக தலைவர் விஜய் நேற்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் செய்தார். இதற்காக நேற்று காலை 10 மணி அளவில், நீலாங்கரையிலுள்ள தனது இல்லத்திலிருந்து விஜய் காரில் புறப்பட்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமாகக் கூடியதால், காரின் மேல் பகுதியில் நின்றபடி தொண்டர்களை நோக்கி அவர் கையசைத்தார்.
தாம்பரம் அருகே வந்தபோது தனது காரிலிருந்து பிரச்சார வேனுக்கு விஜய் மாறினார். அங்குள்ள வரதராஜபுரம், தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் தவெக வேட்பாளர் சரத்குமாருக்கு ஆதரவாக அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனால் வண்டலூர் வெளிவட்டச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து பூந்தமல்லி வழியாக கோயம்பேடு பகுதிக்கு விஜய் சென்றார். அங்கு தொண்டர்கள் வைத்திருந்த கட்சி கொடிகளை வாங்கி உயர்த்திப் பிடித்தபடியே அவர் சிறிது தூரம் சென்றார்.
அங்கிருந்து பொன்னேரிக்குச் சென்ற அவர், பொன்னேரி (தனி) மற்றும் கும்மிடிப்பூண்டி வேட்பாளர்கள் ரவி, விஜயகுமார் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். பஞ்செட்டி மற்றும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அவர் ‘ரோடு ஷோ’ மேற்கொண்டார். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் செய்தார். அங்கு திரண்டிருந்த ஏராளமான மக்கள் அவருக்குப் பூக்களைத் தூவி வரவேற்பு அளித்தனர்.
இதேபோல் விருகம்பாக்கத்தில் சபரிநாதன், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், கொளத்தூரில் வி.எஸ். பாபு என தவெக வேட்பாளர்கள் பலருக்கு அவர் ஆதரவு திரட்டினார். இன்று சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தவெக-வின் பொதுக்கூட்டம் நடக்கிறது. விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.