வேல்முருகன் | கோப்புப்படம் 
தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்க தவாக வலியுறுத்தல்

மு.வேல்சங்கர்

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில், உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் மகா குடமுழுக்கு செப்.17-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழரின் வரலாறு, பண்பாடு, கலை, கட்டிடக்கலை மற்றும் சைவ மரபின் பெரும் அடையாளமாகத் திகழும் இத்திருக்கோயிலின் குடமுழுக்கு நிகழ்வில், தமிழ்ச் சமய மரபுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்க வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பாகும்.

இந்தக் கோரிக்கை வெறும் மொழி உணர்வு சார்ந்த ஒன்றல்ல. தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட தமிழ்ச் சைவப் பக்தி இலக்கியங்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழரின் இறைநெறியோடு பின்னிப் பிணைந்தவை. எனவே, மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் நமது தமிழ் மரபு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வில், சடங்குகள் முறையாக நடைபெறுவதோடு மட்டுமல்லாமல், தமிழ்ச் சைவ மரபின் குரலும் அதில் முழுமையாக ஒலிக்க வேண்டும். எனவே, தமிழ் ஓதுவார்களுக்கு உரிய இடம், வாய்ப்பு, மரியாதை ஆகியவற்றை உறுதி செய்யுமாறும், குடமுழுக்கு நிகழ்வுகளில் தேவாரம், திருவாசகம், திருமுறைகள் உள்ளிட்ட தமிழ்ச் சைவ மரபுகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும் வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT