டி.விஜயகுமார்
வேலூர்: வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதிகளில் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்ட விவகாரத்தில் தவெக ஒன்றிய செயலாளரின் பதவியை பறித்ததுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியம்பாடி புதூர், நெல்வாய், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கணியம்பாடி கிழக்கு ஒன்றிய தவெக செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கடந்த 22-ம் தேதி செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதம் ரூ.1 லட்சம் மாமூல் கொடுத்தால்தான் தொழில் செய்ய முடியும் என கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான, வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் செங்கல் சூளை உரிமையாளர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கணியம்பாடி காவல் நிலையம் அருகேயுள்ள வேலூர்-திருவண்ணாமலை கூட்டுச்சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் மறியல் செய்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், புகாருக்கு உள்ளான தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.விஜயகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து தவெக ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜி.விஜய் மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.