தேர்தல் அறிக்கை தயார் செய்வது தொடர்பாக, பொதுமக்களின் கருத்துகளை கேட்க தவெக தேர்தல் அறிக்கை குழு பிப். 1-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
தமிழக மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் இலக்காகக் கொண்டு, மக்களுக்கான தேர்தல் அறிக்கை மக்களிடம் இருந்தே உருவாக வேண்டும் என்று கூறி தவெக, தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவையும் விஜய் நியமித்துள்ளார். அதில் தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன், முன்னாள் எம்எல்ஏ-வான ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நேரடியாகக் கேட்டறிந்து, தேர்தல் அறிக்கையை தயார் செய்ய, தேர்தல் அறிக்கைக் குழுவினர் தமிழகம் முழுவதும் ஐந்து மண்டலங்களாகப் பிரிந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள பொதுமக்கள், விவசாய சங்கங்கள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழில் அமைப்புகளை சேர்ந்தோரை சந்தித்து அக்குழு கருத்துகளை கேட்க உள்ளது.
அதன்படி, பிப்.1-ம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை மதுரையிலும், பிப்.4-ம் தேதி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களை கடலூரிலும், பிப்.7-ம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்ட மக்களை கோவையிலும் தேர்தல் அறிக்கைக் குழுவினர் சந்தித்து கருத்துகளை கேட்டறிகின்றனர்.
தொடர்ந்து பிப்.9-ம் தேதி திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை திருச்சியிலும், பிப்.11-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை சென்னையிலும் இக்குழு சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழக மக்களையும், ஒட்டு மொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட இருப்பதாக என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பிப்.2-ல் மூன்றாம் ஆண்டு விழா: தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தைக் கொண்டாட உள்ளோம். விஜய் தலைமையில், தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிப்.2-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மக்களுக்காக உழைத்து மக்களுடன் மக்களாக இணைந்து நிற்போம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிவோம். மாபெரும் வெற்றி பெற்று, விஜய் தலைமையில் மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம்” என்று கூறியுள்ளார்.