

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுக-வில் இணையும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுக-வில் பலரும் சேர்ந்து வருகின்றனர். அதிமுக-வின் வெற்றி பிரகாசமாக உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதிமுக-வுக்கு துரோகம் இழைத்தவர் என்பதால் பொதுக்குழு கூடி முடிவெடுத்து, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதால் மீண்டும் அவரை கட்சிக்குள் இணைக்க வாய்ப்பில்லை. அது, 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி எடுத்த நடவடிக்கை; பொதுச்செயலாளர் எடுத்த நடவடிக்கை இல்லை. வரும் தேர்தலில் அதிமுக தான் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.
இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பிருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன் முறையாக அறிவிப்போம். யாருக்கு எத்தனை சீட், எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
திமுக அரசை அகற்ற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மக்களுக்கானதாக இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தினம்தோறும் போட்டோ ஷூட் மட்டும் நடக்கிறது. அத்துடன் அது முடிந்து விடுகிறது. திட்டங்களை நிறைவேற்ற 52 குழுக்களை போட்ட நிலையில், வெள்ளை அறிக்கை கேட்டால் விளக்கம் இல்லை. வெற்று அறிவிப்புகளை விட்டு கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்து, மக்களை ஏமாற்றி ஊழல் அரசாக திமுக அரசு உள்ளது. திமுக அரசில் ரூ.4 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்.
2026-2027 நிதியாண்டுக்கான திட்டங்களுக்கு சட்டப்பேரவை ஒப்புதல் பெறாமல் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். விதிகளை மீறி முறைகேடு நடைபெற்றுள்ளது. முறைகேடுகளை எவ்வித அச்சமும் இல்லாமல் செய்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விதிமுறைக்கு முரணாக விடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்படும். நிரந்தர டிஜிபி-யைக் கூட நியமிக்காமல் பொறுப்பற்ற அரசாக திமுக அரசு உள்ளது.
டெல்லிக்கு நாங்கள் அடிமை இல்லை. திமுக தான் அடிமையாக உள்ளது. இன்றைக்கு, காங்கிரஸ் தலைமையைப் போய் கெஞ்சும் நிலைக்கு திமுக வந்து விட்டது. திமுக கூட்டணியில் குழப்பம் வந்துவிட்டது. கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும் என கனிமொழி கூறியுள்ளார். எந்தப் படத்தில் நடித்தார் என தெரியவில்லை. நான்கில் ஒரு பங்கு கோரிக்கையைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. சென்றமுறையும் கனிமொழிதான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் மக்களை திமுக-வால் சந்திக்க முடியவில்லை.
விஜய்க்கு ரசிகர்கள் வரத்தான் செய்வார்கள். அவர் ஒரு சிறந்த நடிகர்; அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சிறந்த அரசியல்வாதி நாங்கள் தான். மக்களுக்கு சேவை செய்வது நாங்கள் தான். கரூரில் 41 உயிர்கள் போய்விட்டது. அவர்கள் யாருக்காக உயிரிழந்தார்கள். விஜய்யை பார்ப்பதற்காக, அவர் பேச்சை கேட்பதற்காக வந்த கூட்டம்தான் அது.
அதனால், பாதிக்கப்பட்டவர்களை பார்க்க நேரடியாக சென்றிருக்க வேண்டும். நாங்கள் போனோம். எந்தக் கட்சி என்று நாங்கள் பார்க்கவில்லை. விலை மதிக்க முடியாத உயிர்கள் போய்விட்டன. அந்த குடும்பங்களுக்கு எங்களால் முடிந்த ஆறுதலைக் கூறினோம். அந்த ஆறுதலைக் கூட உங்களால் கூற முடியவில்லை. உச்சத்தில் இருந்து வந்துள்ளதாக கூறும் விஜய் யாருக்காக உச்சத்தில் இருந்து வந்துள்ளார்?
ஜெயலலிதா இருந்தபோது சுனாமி வந்தது. அதிகாரிகள் எச்சரிக்கையையும் மீறி மக்களை போய்ப் பார்த்தார். புயல் வந்தவுடன் மூன்று மாதம் அங்கேயே தங்கி அமைச்சர்கள் சீரமைத்தனர். ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரி அதிமுக அரசாங்கம்தான். தமிழகம் வளர்வதற்கு அதிமுக ஆட்சியே காரணம். வாக்குறுதிகள் குறித்து தூய்மைப் பணியாளர்கள் கேட்டால், அதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் சர்வாதிகாரமாக பதில் சொல்கிறார்கள். வரும் தேர்தலில் திமுக-வுக்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.