தவெக தலைவர் விஜய் பாஜக-வின் கைக்கூலி என திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், “சிறுபான்மையினரின் உண்மையான பாதுகாவலன் விஜய் தான்” என்கிறார் தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா பானு. அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசியதிலிருந்து...
தவெக ஒரு அனுபவமில்லாத, சிறுபிள்ளைத்தனமான கட்சி என்று வரும் விமர்சனங்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?
எங்களை அனுபவமில்லாதவர்கள், சிறுபிள்ளைத்தனமானவர்கள் என்று விமர்சிப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். பல தசாப்தங்களாக அரசியலில் இருக்கும் உங்கள் அனுபவம் ஊழலையும், கடன் சுமையையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலையும்தான் தந்தது என்றால், அப்படிப்பட்ட அனுபவம் எங்களுக்குத் தேவையில்லை. எங்கள் தலைவர் தளபதி விஜய், தனது 30 ஆண்டுகால உழைப்பால் சம்பாதித்த நற்பெயரையும் புகழையும் பணயம் வைத்து அரசியலுக்கு வந்திருக்கிறார். இது சிறுபிள்ளைத்தனம் அல்ல; மாபெரும் துணிச்சல்.
சிறுபான்மையினரின் தோழன் என்று திமுகவை பலரும் சொல்லிவரும் நிலையில் நீங்கள் தவெக-வை தேர்ந்தெடுத்தது ஏன்?
தமிழக அரசியலில் சிறுபான்மையினரின் ‘நண்பர்கள்’ என்று சொல்லிக்கொண்டு, பலர் எங்களை வெறும் தேர்தல்நேரத்து வாக்கு வங்கியாக மட்டுமே பார்த்தார்கள். உண்மையில், சிறுபான்மையினரின் தோழன், பாதுகாவலன் தலைவர் விஜய் தான். சிறுபான்மையினர் இந்த மண்ணின் பூர்வகுடிகள், அவர்களுக்குப் பாதுகாப்பு என்பது அடிப்படை உரிமை என்ற தெளிவான பார்வை எங்கள் தலைவரிடம் உள்ளது. விஜய்யின் மக்கள் சேவையும், குணத்தையும் பிடித்துப்போய் தமிழகத்தின் முதல் ரசிகையாக நற்பணிமன்றத்தில் இணைந்தது முதல் தற்போதுவரை 25 ஆண்டுகளாக அவருடன் பயணித்து வருகிறேன்.
காரை மறித்து நியாயம் கேட்ட தூத்துக்குடி அஜிதா ஆக்னலை விஜய் அலட்சியப்படுத்திச் சென்றது சரிதானா?
தலைமையிடம் பேசியிருந்தால் தலைமை நல்ல தீர்வை அவருக்கு வழங்கியிருக்கும். அதை மீறி அஜிதா அவசரப்பட்டு தலைவரின் காரை வழி மறித்தது, தலைவரை மதிக்காத செயல். இதை வைத்து, விஜய் பெண்களை அலட்சியப்படுத்துகிறார் என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கச் சிலர் முயல்கிறார்கள். ஒரு அரசியல் கட்சியில் தலைவரைச் சந்திக்க முறையான வழிமுறைகள் உள்ளன. அதைவிட்டு, சாலைகளில் காரை மறிப்பது என்பது ஒரு நிர்வாகிக்கு அழகல்ல.
அண்மைக் காலமாக தவெக நிர்வாகிகள் மீது உங்கள் கட்சியினரே புகார்களை அள்ளித்தெளித்து வருகிறார்களே..?
ஒரு புதிய பேரியக்கம் வளரும்போது, அதன் கிளைகளில் ஏற்படும் உராய்வுகள் இயற்கைதான். தவெக-வில் சாதாரணத் தொண்டனுக்கும் தன் கருத்தைச் சொல்லும் உரிமை உண்டு. தலைவர் விஜய்க்கும், தலைமைக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் தான் எங்கள் மாவட்டச் செயலாளர்கள். இதைப் புரிந்து கொண்டு நடந்தால் யார் மீதும் எந்தப் புகார்களும் எழாது.
தவெக-வில் கோஷ்டி பூசல் இப்போதே அதிகரித்துவிட்டதோ?
எங்கள் கட்சியில் கோஷ்டி என்று எதுவும் இல்லை. உழைத்தவர்கள் எல்லாருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.
2026 தேர்தலில் என்ன நோக்கத்துக்காக தவெக களத்தில் நிற்கிறது?
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற ஒற்றை வரியிலேயே விஜய் இதற்கு விடை அளித்திருக்கிறார். ‘ஆட்சி மாற்றம்’ என்பது ஒரு கட்சி போய் இன்னொரு கட்சி வருவது. ஆனால் நாங்கள் விரும்புவது, ‘அரசியல் மாற்றம்’. அதாவது, அரசு திட்டங்களின் பயன்கள் சாதாரண ஏழை எளிய மக்களுக்கும் சலுகையாக அல்லாமல் உரிமையாகக் கிடைக்க வேண்டும். ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே எங்களின் லட்சியம். 2026-ல் எங்கள் தலைவர்தான் முதல்வர். அதில் எந்த மாற்றமும் இல்லை.
தேர்தலில் பெண்களுக்கு எவ்வளவு இடங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
இதுவரை பல கட்சிகள், பெண்களை வெறும் பரப்புரைக்கும், கூட்டங்களில் கூட்டத்தைக் கூட்டுவதற்கும் மட்டுமே பயன்படுத்தின. ஆனால் தவெக-வில், கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் கொள்கைத் தலைவர்களாக வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் போன்ற வீர மங்கையர்களை விஜய் அறிவித்தபோதே, தவெக-வில் பெண்களுக்கான முக்கியத்துவம் என்ன என்பது தெளிவாகிவிட்டது.
தவெக தூய கட்சி அல்ல... கலப்படக் கட்சி என அதிமுக விமர்சித்திருப்பதை பற்றி..?
தவெக தூய கட்சியா அல்லது கலப்படக் கட்சியா என்பது எங்களுக்கும், மக்களுக்கும் தெரியும். விமர்சனம் செய்பவர்கள் செய்துகொண்டே இருக்கட்டும். விஜய் காட்டிய வழியில் மக்கள் நலப் பணிகளில் நாங்கள் கவனம் செலுத்துவோம். 2026-ல் மக்கள் தரும் தீர்ப்பு, யார் ‘தூய’ கட்சி என்பதை நிரூபிக்கும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மவுனம் காப்பது ஏன்?
உணர்ச்சிகளைத் தூண்டி அதில் அரசியல் லாபம் பார்க்க நினைக்கும் கூட்டத்தில் விஜய் ஒருபோதும் இணைய மாட்டார். அவர் மவுனம் காத்தால் அதில் பல அர்த்தங்களும், நன்மைகளும் இருக்கும்.
விஜய்யின் அரசியல் அணுகுமுறை பலவாறாக விமர்சிக்கப்படும் நிலையில், அவரது அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
பழகிப்போன ‘பழைய அரசியல்பாணிக்கு’ விஜய் முற்றிலும் மாறானவர். ‘தேவைப்படும்போது மட்டுமேபேசுவது, பேசும்போது தீர்க்கமாகப் பேசுவது’ என்ற கொள்கையைக் கொண்டவர். பல தலைவர்கள் டிவி விவாதங்களிலும், பேட்டிகளிலும் மட்டுமே அரசியல் செய்கிறார்கள். ஆனால் விஜய், மக்களிடம் நேரடியாகச் செல்வதையும், அடிமட்டத் தொண்டர்களுடன் உரையாடுவதையும் நம்புகிறார். எனவே, அவரது அணுகுமுறையில் மாற்றம் தேவையில்லை என்பதுதான் எனது பதில்.