தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக பதவியேற்பு செய்ய ஆளுநரை வலியுறுத்தி திண்டுக்கல்லில் சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கிய பெண்கள்.
திண்டுக்கல்: தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக பதவியேற்பு நடத்த வலியுறுத்தி, திண்டுக்கல்லில் பெண்கள் கையில் பதாகை ஏந்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராடத்தில் ஈடுபட்டனர்.
இவர்களை போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் தெற்குரதவீதி, எருமைக்காரத் தெருவை சேர்ந்தவர் சரண்யா. இவர் தவெக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர், நேற்று காலை திடீரென திண்டுக்கல்லில் திருச்சி, பழநி ரோடு சந்திப்பு கல்லறைத்தோட்டம் அருகே ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ என்ற பதாகையை ஏந்தி, கழுத்தில் தவெக துண்டு அணிந்து அமர்ந்தார்.
இவருடன் இவரது தோழி வளர்மதி, வளர்மதியின் 15 வயது மகள் ஆகியோரும் கையில் பதாகையை ஏந்தி அமர்ந்தனர்.
ஜனநாயக முறைப்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக், உண்ணாவிரதத்தை துவக்கிய சரண்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
‘அனுமதியின்றி செயல்பட்டுள்ளீர்கள். அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுனர் செயல்படுவார்’ என உண்ணாவிதரம் இருந்தவர்களிடம் போலீஸார் விளக்கி பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் உண்ணாவிரதத்தை கைவிட பெண்கள் மறுத்தனர். இதையடுத்து சரண்யா, வளர்மதி ஆகிய இருவரையும் விசாரணைக்காக திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையத்திற்கு
போலீஸார் அழைத்துச்சென்று கைது செய்தனர். தவெக தலைவர் விஜய்க்கு பதவிப்பிரமானம் செய்ய வலியுறுத்தி பெண்கள் திடீரென சாகும்வரை உண்ணாவிரதத்தை திண்டுக்கல்லில் துவக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து தவெக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வரும்முன் போலீஸார் இரு பெண்களையும் உண்ணாவிரதம் இருந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.